தமிழர்களின் பிரச்சினையை விடவும், சீனாவுடனான போட்டிக்கே மேற்குலம் முன்னுரிமை அளிக்கிறது

102 0

தமிழர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வினை அளிப்பதற்கான நடவடிக்கைகளை எடுப்பதற்குப் பதிலாக சீனாவுடனான போட்டியினால் அதனைக் கையாள்வதற்கு அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலக நாடுகள் முக்கியத்துவம் அளிக்கின்றன என்று அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்களிடத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவுக்கு விஜயம் செய்துள்ள கஜேந்திரகுமார் பொன்னம்பலம், அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்களான வில்லி நிக்கில், டிபோத் ரொஸ், ஜம்மி ரஸ்கின், டெனி கே.டேவிஸ் ஆகியோருடன் சந்திப்புக்களை நடத்துள்ளார்.

இந்தச் சந்திப்பு தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

இலங்கையின் நல்லிணக்கத்தையும் பொறுப்புக்கூறலையும் வலியுறுத்தும் தீர்மானம் 427 காங்கிரஸ் சபையில் நிறைவேற்றப்பட்டது. அந்த வகையில் தமிழர்கள் மீது கரிசனைகளைக் கொண்டுள்ள அவர்களுடனான சந்திப்பில் தமிழர்களின் தற்போதைய நிலைமைகள் தொடர்பில் எடுத்துரைத்தோம்.

விசேடமாக ராஜபக்ஷக்களின் காலத்தில் தமிழ் மக்கள் மீதும், தமிழர் தேசத்தின் மீதும் கடுமையான திட்டமிட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. இந்த நிலையில் தற்போது, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் ஆட்சி முன்னெடுக்கப்படுகின்றது.

இந்தத் தருணத்தில் தமிழர்களின் தேசத்தினை மிக வேகமாக இல்லாதொழிக்கின்ற செயற்பாடுகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.  பௌத்த மயமாக்கல், அபிவிருத்தியின் பெயரில் தமிழர்களின் நிலங்களைப் பறித்து சிங்கள குடியேற்றங்களை மேற்கொள்ளுதல், தமிழர்களின் பூர்வீக நிலங்களிலிருந்து தமிழர்களை பாரிய அபிவிருத்தியின் பெயரால் வெளியேற்றுதல், அடிப்படை உரிமைகளான பேச்சு சுதந்திரம், நினைவுகூருகின்ற சுதந்திரம், கருத்து வெளியிடுகின்ற சுதந்திரம் ஆகிய ஜனநாயக விரோதமான செயற்பாடுகளைத் தமிழர்களுக்கு எதிராக முன்னெடுத்தல், உள்ளிட்ட செயற்பாடுகளே தீவிரமாக முன்னெடுக்கப்படுகின்றன. இதனால் நிலைமைகள் நாளுக்கு நாள் மோசமடைந்து வருகின்றன.

அதேநேரம், உள்நாட்டில் பூகோள போட்டித்தன்மை காணப்படுகின்றது. விசேடமாகச் சீனாவுடன் மேற்குலக நாடுகள் போட்டிப்போடுகின்ற தன்மைகள் காணப்படுகின்றன. தமிழர்களுக்கு எதிரான செயற்பாடுகளைத் தடுப்பதற்குப் பதிலாக அரசாங்கம் சீனாவுடனான விடயங்களைக் கட்டப்படுத்தும் செயற்பாடுகளையே மேற்கத்தேய நாடுகள் முன்னெடுத்து வருகின்றன.

தற்போது இலங்கை அரசாங்கத்துக்கு பாரிய பொருளாதார நெருக்கடிகள் ஏற்பட்டுள்ள. இதனால் அதற்கு பாரிய நிதி உதவிகள் தேவையாக உள்ளன. இந்தச் சந்தர்ப்பத்தினை அமெரிக்கா உள்ளிட்ட மேற்குல நாடுகள், இலங்கை அரசாங்கம் தமிழர்களுக்குச் சுயநிர்ணய அடிப்படையிலான தீர்வொன்றை வழங்குவதற்கும், பொறுப்புக்கூறலைச் செய்வதற்காகச் சர்வதேச குற்றவியல் விசாரணையொன்றை முன்னெடுப்பதற்கும் தங்களுடைய அரசாங்கத்துக்கு அழுத்தங்களை வழங்க வேண்டும் என்று கோரியுள்ளேன்.

அத்தோடு. தமிழர்களின் தலைவிதியைத் தீர்மானிப்பதற்காக சர்வஜன வாக்கெடுப்பொன்றை நடத்துவதோடு, பொறுப்புக்கூறலுக்காவும், இனப்பிரச்சினை தீர்வுக்காகவும் தீர்மானங்களைத் தொடர்ச்சியாக அமெரிக்க காங்கிரஸ் நிறைவேற்ற வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளேன் என்றார்.