சமூக மாற்றத்தை ஏற்படுத்துகின்ற வரலாற்றுப் பயணத்திற்காகவே நாங்கள் ஒன்றுசேர்ந்துள்ளோம் – ஹரினி அமரசூரிய

75 0

சமூக மாற்றத்தை ஏற்படுத்துகின்ற வரலாற்றுப் பயணத்திற்காகவே நாங்கள் ஒன்றுசேர்ந்துள்ளோமென தேசிய மக்கள் சக்தியின் தேசிய நிறைவேற்றுப் பேரவை உறுப்பினரும் பாராளுமன்ற உறுப்பினருமான கலாநிதி ஹரினி அமரசூரிய தெரிவித்தார்.

அண்மையில் பொலநறுவையில் இடம்பெற்ற “பெண்களாகிய நாங்கள் ஒரே முச்சுடன்” என்ற தேசிய மக்கள் சக்தியின் பெண்கள் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே ஹரினி அமரசூரிய மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இங்கு மேலும் உரையாற்றுகையில்,

இலங்கையின் தென் மாகாணத்திலிருந்து ஆரம்பித்து முழுநாட்டையும் உலுக்கிய பெண்களின் பலம் இன்று புலதிசிபுரத்திற்கும் வந்துள்ளது. இன்று முழு நாடும் மாத்திரமல்ல முழு உலகுமே இந்த பெண்களையே பார்த்துக்கொண்டிருக்கிறது.  இது ஒரு தீர்வுக்கட்டமான தருணமாகும்.

சமூக மாற்றத்தை ஏற்படுத்துகின்ற வரலாற்றுப் பயணத்திற்காகவே நாங்கள் ஒன்று சேர்ந்துள்ளோம். எமது வரலாற்றினை புதிதாக எழுதுகின்ற பணியின் பங்காளிகளாக நீங்கள் மாறியுள்ளீர்கள். வரலாற்றில் பெண்களாகிய எங்களின் குரல் ஒடுக்கப்பட்டிருந்தது. எமது வரலாற்றினை எழுத எமக்கு  வாய்ப்பு இருக்கவில்லை.

நாடு சுதந்திரமடைந்து 76 வருடங்களாகிய போதிலும் பெண்களுக்கு இன்னமும் சுதந்திரம் கிடைக்கவில்லை. எமது சுதந்திரத்தைப் பெற்றுக்கொள்வதற்காகவும் எமக்குள் இருக்கின்ற துணிச்சலை நாட்டை மாற்றியமைப்பதற்காக பிரயோகிக்கவுமே இன்று நாங்கள் இங்கு குழுமியிருக்கிறோம்.

பெண்களின் வாழ்க்கை எந்தளவுக்கு பாதுகாப்பானது, எந்தளவுக்கு அபிமானத்துடன் வாழ்கிறார்கள் என்பது ஒரு நாட்டின் அபிவிருத்தி நாகரிகமானதா என்பதை அளக்கின்ற அளவுகோலாகும். கடந்த 17 மாதங்களில் 119 தாய் மரணங்கள் இடம்பெற்றுள்ளன.

எமக்கு குடும்ப சுகாதார சேவகிகள் மூலமாக  உன்னதமாக சமுதாய சுகாதார சேவை கிடைத்திருந்தது. வைத்தியசாலைக்கு கிளினிக்கிற்குச் சென்றால் ஒருசதம்கூட செலவிடாமல் உலகில் இருக்கின்ற மிகச்சிறந்த சுகாதார சேவையைப் பெற்றுக்கொள்ளக்கூடியதாக இருந்தது. இன்று வைத்தியசாலைக்குச் சென்றால் தாதிமார்களும் மருத்துவர்களும் இல்லை.

அதைப்போலவே மருந்தும் கிடையாது. பாரிய செலவில் வெளியில் இருந்து மருந்துகளை கொள்வனவு செய்ய வேண்டியுள்ளது. இன்று பெண்கள் சுகாதாரத்தைக் கைவிட்டுள்ளார்கள். அது உணவு மற்றும் சுகாதாரம் ஆகிய இரண்டையுமே ஒரேநேரத்தில் சமாளித்துக்கொள்ள முடியாதென்பதாலேயே.

எமது சகாதார அமைச்சர் அப்பட்டமாகவே சுகாதாரத்துறையை நாசமாக்கிவிட்டார்.  பிரபல்யமான திருடன் எனப் பெயர்பெற்ற முன்னாள் சுகாதார அமைச்சர் சிறைவைக்கப்பட்டுள்ளார். அதனை சாதிக்க மக்கள் எவ்வளவுதான் போராட்டங்களை நடாத்தினார்கள்? எவ்வளவு காலம் எடுத்தது? எமது வாழக்கைக்கு அவசியமான அனைத்துத் துறைகளும் சீரழிக்கப்பட்டுள்ளன.

கல்வி பாரதூரமான அனர்த்தமாக மாறியுள்ளது. நம்பிக்கையுடன் பிள்ளையைப் பாடசாலைக்கு அனுப்பமுடியாது. தற்போது இளைஞர்களுக்கு கல்வியின் பெறுமதி பற்றிய நம்பிக்கை கிடையாது. பிள்ளைகளை பாடசாலைகளில் தக்கவைக்க முடியாதென ஆசிரியர்கள் கூறுகிறார்கள். ஒருபோதுமே நிலவியிராதவகையில் பிள்ளைகள் பல்கலைக்கழகம் செல்ல விருப்பமில்லாதவர்களாகி விட்டார்கள். பிள்ளைக்கு கல்விபுகட்டி கரைசேர்க்க முடியுமென்ற பெற்றோர்களின் நம்பிக்கை சிதைவடைந்துவிட்டது.

76 வது சுதந்திரத்தைக் கொண்டாடுகின்ற வேளையில் இந்த ஆட்சியாளர்கள் பிரசைகளுக்கு எஞ்சவைத்துள்ள எதிர்பார்ப்பு என்ன? அவர்கள் எமது சுதந்திரத்தை நாசமாக்கி இத்தடவை சுதந்திரதின வைபவத்தை மக்களுக்குத் தடைசெய்திருக்கிறார்கள். மக்களில்லாத  சுதந்திரக் கொண்டாட்டம் என்ன? நாங்கள் 2025 இல் எமது பிரசைகளின் சுதந்திரத்தை அனுபவிக்கின்ற ஆண்டாக மாற்றுவோம்.

மக்கள் நேயமுள்ள  ஆட்சியில்தான் மக்களுக்கு சுதந்திரம்  கிடைக்கும்.  அத்தகைய ஆட்சியொன்றை கட்டியெழுப்புகின்ற பணியைத்தான் நாங்கள் தற்போது செய்துகொண்டிருக்கிறோம். இந்த நாட்டு சனத்தொகையில் 52% பெண்களாவர். இந்த நாட்டில் அனைத்துத்துறைகளிலும் பெண்கள் நாட்டுக்காக பாரிய பங்கினை ஆற்றிவருகிறார்கள். ஆடைத்தொழில்த்துறையில் தொழில்புரிந்து, வெளிநாடுகளுக்குச்சென்று, தேயிலைக் கைத்தொழிலில் சொல்லொணாத் துயரங்களை அனுபவித்து டொலர்களை ஈட்டினார்கள்.

இந்த ஆட்சியாளர்கள் அவற்றை நாசமாக்கினார்கள். கல்வி, சுகாதாரம், போன்ற துறைகளில் பாரிய செயற்பொறுப்பினை பெண்கள் ஆற்றிவருகிறார்கள். எந்தவிதமான சம்பளத்தையும் பெறாத பெண்கள் சமூகப் பணிக்காக பாரிய பங்களிப்பினை நல்கி வருகிறார்கள். பெண்கள் ஆற்றுகின்ற பணிகள் ஈடேற்றப்படாவிடின் இந்த நாடு ஒரு நாள்கூட நிலவமாட்டாது. பிள்ளைகளை வளர்த்தெடுப்பது, பிள்ளைகளின் கல்வியை மேற்பார்வை செய்வது, முதியோரைப் பராமரிப்பது, குடும்ப அங்கத்தவர்கள் சுகவீனமுற்றால் பார்த்துக்கொள்வது இவையனைத்தையும் பெண்களே ஈடேற்றிவருகிறார்கள்.

இந்த பணிகளுக்காக சமூகத்திடமிருந்து கிடைக்கின்ற பெறுமதி என்ன? நீங்கள் சமையலறைக்குள் புரிகின்ற போராட்டம் எமக்குத் தெரியும். இந்த தருணத்திலும் இரவு என்ன சாப்பிடுவது என நீங்கள் சிந்திக்கக்கூடும். நாளைய நாள் பற்றி சிந்திக்கக்கூடும்.

உங்களுடைய தனித்தன்மையும் உன்னதநிலையும் அதுதான். அந்த முயற்சி மூலமாகத்தான் இந்த நாடு மாற்றமடைகின்றது. எமது வாழ்க்கை வசதியானதாக அமைகின்ற சுதந்திரமாக வாழக்கூடிய சமூகமொன்று கட்டியெழுப்பப்படல் வேண்டும். இதுவரை பொறுத்தது போதுமென இந்நாட்டின் பெண்கள் தற்போது தீர்மானித்துள்ளார்கள்.

அதைவிட நியாயமானதும் பெண்களுக்கு பெறுமதியளிக்கின்றதும், பெண்களாகிய எமது பலத்திற்கு  இடமளிக்கின்ற சமூகமாக மாற்றியப்போமென பெண்கள் தற்போது தீர்மானித்துள்ளார்கள். அதற்கு தேசிய மக்கள் சக்தி  தலைமைத்துவம் வழங்குகின்றது. அதற்காக நாமனைவரும் ஒன்றுசேர்ந்துள்ளோம்.

தேர்தல் காலங்களில் எம்மைப் பாவித்து அதிகாரத்திற்கு வந்து எமது வாழ்க்கையை நாசமாக்குவதையே மரபுரீதியான அரசியல்  இதுவரைகாலமும் புரிந்து வந்துள்ளது. தொடர்ந்தும் அவர்களின் அதிகாரக் கருத்திட்டத்திற்காக எம்மை ஈடுபடுத்த இடமளிக்கமாட்டோம் எனும் முடிவினை எடுத்துள்ளோம்.

தேசிய மக்கள் சக்தி செய்துகொண்டிருப்பது வெறுமனே தேர்தல் இயக்கமொன்று மாத்திரமல்ல: நாசமாக்கிய நாட்டை சீர்செய்யவே உங்களை ஒருங்கிணைத்துக் கொண்டிருக்கிறோம். நாங்கள் ஏகோபித்த நோக்கத்துடன் கூட்டு முயற்சியில் ஈடுபட்டால்தான்  இந்த நாட்டை சீராக்க முடியும்.  நீங்கள் அந்த பிரமாண்டமான இயக்கத்தின் பங்காளிகள். இந்த சமூகத்தை மாற்றியமைக்காமல் ஓயமாட்டோம் எனும் திடசங்கற்பத்துடன் நாங்கள் முன்நோக்கி நகர்வோம் என மேலும் தெரிவித்தார்.