அரசாங்கத்தின் தேவையான நேரத்தில் நாணய நிதியத்திடமிருந்து கடனுதவிகளைப் பெற்றுக் கொள்ள முடியாது. எனவே மூன்றாம் கட்ட கடன் தொகை நாணய நிதியம் தீர்மானிக்கும் காலத்திலேயே வழங்கப்படும் என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.
வாராந்த அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு செவ்வாய்க்கிழமை (6) இடம்பெற்ற போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,
சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து இரு கட்ட கடன் தொகைகள் கிடைத்துள்ளன. மூன்றாம் கட்ட கடன் தொகையைப் பெற்றுக் கொள்ள வேண்டியுள்ளது. இவ்வாறு கடன் தொகைகளை எமக்கு தேவையான நேரத்தில் நாணய நிதியம் வழங்காது. அவர்களால் திட்டமிடப்பட்டுள்ள நேர அட்டவணைக்கமையவே வழங்கும்.
வரவு மற்றும் செலவுக்கிடையிலான இடைவெளியை நிரப்புவதற்காக ஆசிய அபிவிருத்தி வங்கி, உலக வங்கி என்பவற்றிடமிருந்து நிதியுதவிகள் எதிர்பார்க்கப்படுகின்றன. 2027இல் எமது அந்நிய செலாவணி இருப்பு 14 பில்லியன் டொலர்களாக அதிகரிக்கப்பட்டிருக்க வேண்டும் என்பது நாணய நிதியத்துடன் ஏற்படுத்திக் கொள்ளப்பட்டுள்ள இணக்கப்பாடாகும்.
அந்த இலக்கிற்கமையவே நாம் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றோம். அதன் பின்னர் 2032ஆம் ஆண்டு வரை வேறு வேலைத்திட்டங்கள் உள்ளன. அந்த சந்தர்ப்பத்தில் யார் ஆட்சியமைத்திருந்தாலும், தற்போது எட்டப்பட்டுள்ள இணக்கப்பாட்டுக்கமையவே நாணய நிதியத்திடமிருந்து கடனுதவிகளைப் பெற்றுக் கொள்ள முடியும் என்றார்.