ஜனாதிபதியின் கொள்கை உரைக்குச் சபைக்குள் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்துவோம்

41 0

நாட்டு மக்களுக்கு நகைச்சுவை காண்பிப்பதில் ஜனாதிபதி தலைமைத்துவம் வழங்குகிறார். ஜனாதிபதியின் கொள்கை உரைக்கு இன்று சபைக்குள் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்துவோம் என பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்தார்.

கொழும்பில் உள்ள பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் காரியாலயத்தில் செவ்வாய்க்கிழமை (6) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

எதிர்கால பரம்பரையை கருத்திற் கொள்ளாமல் வரப்பிரசாதங்களை மாத்திரம் கவனத்திற் கொண்டு தேர்தலில் தீர்மானம் எடுக்கும் தரப்பினர் இருக்கும் வரை இந்த நாட்டை ஒருபோதும் முன்னேற்ற முடியாது. உரித்து செயற்திட்டத்தின் ஊடாக காணி உறுதிப்பத்திரம் வழங்கியுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பெருமை கொள்கிறார்.

இந்த ஆண்டு இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலை இலக்காகக் கொண்டு ஜனாதிபதி செயற்படுகிறார். இந்த காணி உறுதிப்பத்திரம் வழங்கல் எந்தளவுக்கு உண்மையானது என்பது சந்தேகத்துக்குரியது.ஏனெனில் போலியான வாக்குறுதிகளை உண்மை போல் குறிப்பிடுவதில் ஜனாதிபதி திறமையானவர்.

கெஹெலிய ரம்புக்வெல்ல போன்றவர்கள் எதிர்காலத்தில் சுகாதார அமைச்சராக நியமிக்கப்படக் கூடாது என்றால் தேசிய மருந்தகங்கள் கட்டுப்பாட்டு அதிகார சபை சுகாதார அமைச்சிலிருந்து விடுபட்டு சுயாதீன அதிகார சபையாகச் செயற்பட வேண்டும்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தலைமைத்துவத்தில் ஐந்தாவது கூட்டத்தொடர் இன்று ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது.ரணில் விக்கிரமசிங்க கடந்த 2022.07.20 ஆம் திகதி இடைக்கால ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டார்.இதுவரை அவர் பாராளுமன்ற கூட்டத்தொடரை இரு தடவைகள் ஒத்திவைத்து கொள்கை பிரகடனத்தை முன்வைத்துள்ளார். ஆனால் அந்த கொள்கை பிரகடனத்தில் குறிப்பிடப்பட்ட விடயங்கள் ஏதும் செயற்படவில்லை.

நாட்டு மக்களுக்கு நகைச்சுவை காண்பிப்பதில் ஜனாதிபதி தலைமைத்துவம் வழங்குகிறார். மக்களின் வரிப்பணத்தை   வீண் விரயமாக்கும் வகையில் பாராளுமன்ற கூட்டத்தொடரை ஒத்திவைத்தார். புதன்கிழமை (7) ஐந்தாவது கூட்டத்தொடரை ஆரம்பித்து வைக்கவுள்ளார். மக்களின் வரிப்பணத்தையும், காலத்தையும் வீணடிக்கும் ஜனாதிபதியின் கொள்கை உரைக்குச்  சபையில் புதன்கிழமை (7)  எதிர்ப்பை வெளிப்படுத்துவோம் என்றார்.