ஜனநாயக நாட்டில் பறிக்கப்படும் தமிழ்த் தாய்மாரின் உரிமைகள்

65 0

ஜனநாயக நாட்டில் எங்கள் பிள்ளைகளை தேடுவதற்கு உரிமை இல்லையா என வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சங்கத்தின் தலைவி செபஸ்டியன் தேவி கேள்வி எழுப்பியுள்ளார்.

திருகோணமலையில் இன்று (06.02.2024) இடம் பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கையின் 76 ஆவது சுதந்திர தினம் கொண்டாடப்பட்டு வந்த நிலையில் அத்தினத்தில் மட்டக்களப்பு பகுதியில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில் குறித்த ஆர்ப்பாட்டத்திற்கு செல்லும்போது வெருகல் பிரதேசத்தில் பெண் பொலிஸார் உட்பட 35 பேர் தம்மை மறித்து வெருகல் கோயிலுக்குள் பேருந்தை கொண்டு சென்று ஒரு மணித்தியாலங்கள் தங்களை சோதனையிட்டதுடன் கையடக்க தொலைபேசிகளையும் பறித்து சோதனை இட்டதுடன் அங்கு பயணித்தவர்களுடைய விபரங்கள் திரட்டப்பட்டது.

எங்களுடைய பிள்ளைகள் எங்கே என்பதையே கேட்கின்றோம். 15 வருடங்களாக தாங்கள் போராடி வருகின்ற நிலையில் அரசாங்கத்தினால் எதுவித பதில்களும் வழங்கப்படவில்லை. ஜனாதிபதி நான்கு பேர் மாறி மாறிச் சென்றுள்ளனர். இதுவரைக்கும் எவரும் தமது பிள்ளைகளை தேடித் தரவில்லை.எங்களுக்கு சுதந்திரம் வேண்டும்.

எங்களுடைய பிள்ளைகளை தேடுவதற்கு எங்களுக்கு சுதந்திரம் வேண்டும். இந்த ஜனநாயக நாட்டில் எங்களுடைய பிள்ளைகளை கேட்டு போராடுவதற்கு கூட எங்களுக்கு உரிமை இல்லையா? இவ்வாறான செயற்பாட்டில் ஈடுபட்டு வந்த அரசாங்கத்தையும் பொலிஸாரை வன்மையாக கண்டிக்கிறோம்.

ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக வந்த பின்னர் அதிகளவில் குற்றப்புலனாய்வு விசாரணை பிரிவினர் வீடுகளுக்கு தேடி வருகின்றார்கள். ஏன் இவ்வாறான கெடுபிடிகளை எமக்கு ஏற்படுகின்றார்கள் என்பதை நாங்கள் கேள்வியாக கேட்கின்றோம்.

எங்களுடைய குரல்களை நசுக்க வேண்டாம்.எங்களுடைய உரிமைகளை எமக்கு தாருங்கள். எங்களுடைய பிள்ளைகள் எங்கே என்பதையே நாங்கள் கேட்கின்றோம் என தெரிவித்துள்ளார்