ஒன்லைன் பாதுகாப்புச் சட்டத்தில் உயர் நீதிமன்றம் உட்பட எவரும் திருத்தங்களை ஏற்கவோ அல்லது நிராகரிக்கவோ தனக்கு அதிகாரம் இல்லை என்றும், அதற்கான முழு அதிகாரமும் பாராளுமன்றத்திற்கே உள்ளது என்றும் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.
ஒன்லைன் பாதுகாப்பு சட்டமூலத்தை நிறைவேற்றியதில் அரசியலமைப்பை மீறியதாக குற்றம் சுமத்திய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தெரிவித்த கருத்துக்கள் தொடர்பில் சபாநாயகர் இவ்வாறு குறிப்பிட்டார்.
பாராளுமன்றத்தின் சட்டமியற்றும் நடவடிக்கை சட்டமா அதிபர் திணைக்களம் சட்ட வரைவாளர் திணைக்களம் ஆகியவற்றுடன் இணைந்து முன்னெடுக்கப்படுவதால் உயர்நீதிமன்றத்தின் தீர்மானத்திற்கு மாறாக அல்லது அரசியலமைப்பிற்கு முரணாக செயற்படுவதற்கான வாய்ப்புகள் இல்லை என சபாநாயகர் அலுவலகமும் தெரிவித்துள்ளது.
உயர் நீதிமன்றத்தின் எந்தெந்த பரிந்துரைகள் புறக்ககணிக்கப்பட்டன என்பதை சம்மந்தப்பட்ட உறுப்பினர்கள் தெரிவித்தால், உரிய அதிகாரிகள் அதற்கு பதிலளிப்பார்கள். மேற்குறிப்பிட்ட விடயங்களில் சபாநாயகருக்கு விருப்புரிமை இல்லை எனவும் சபாநாயகர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
பாராளுமன்றத்தின் செயல்முறையை நன்கு புரிந்துகொள்ளவேண்டியவர்கள் அதற்கு மாறாக வேறு விதமாக பேசுவது கவலையளிக்கின்றது. சபாநாயகர் தனது விருப்பத்தின்படி சட்டங்களை இயற்றலாம் சட்டமூலங்களில் திருத்தங்களை செய்யலாம் என தெரிவிப்பது அவர்களின் சட்ட அரசமைப்பு குறித்த அறிவை அவமதிக்கின்றது எனவும் சபாநாயகர் அலுவலகம் தெரிவித்துள்ளது.