அலவத்துகொடை சமன் தேவாலயம் மீண்டும் திறப்பு

87 0

சீல் வைக்கப்பட்டிருந்த கண்டி அலவத்துகொடை  சமன் தேவாலயம் மக்கள் வழிபாட்டிற்காக நேற்று ஞாயிற்றுக்கிழமை (28) முதல் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.

குழப்ப நிலை காரணமாக கடந்த  23ம் திகதி முதல் மூடப்பட்டிருந்த சமன் தேவாலயத்தின்  பூசை வழிபாடுகள் உள்ளிட்ட  இதர கடமைகள் நிமித்தம் மீண்டும் திறப்பதற்காக வேண்டி,  குறித்த நடவடிக்கைகளுக்காக  பாதுகாப்பு கோரி கண்டி பௌத்த விவகார பிரதி ஆணையாளர் அனுருத்த ஹேம பண்டார அலவத்துகொட பொலிஸாரிடம்  சென்ற  பொழுது,   தேவாலயத்தின்  கதவை உடைத்து திறந்தால்,  வீடு  உடைத்த குற்றத்தின் பேரில் பிரதி ஆணையாளரை  கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டி வரும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பொலிஸாரின்  இந்த நடவடிக்கைக்கு  கடும் அதிருப்தி தெரிவித்துள்ள பிரதி ஆணையாளர், தொல்பொருள் திணைக்களத்துக்கு அறிவிக்கப்பட்டதுடன், பஸ்நாயக நிலமே பாஷண உதீப பண்டார, அக்குறணை பிரதேச செயலாளர் இந்திக்க அபேசிங்க மற்றும் பிரதேச கிராம உத்தியோகத்தர் ஆகியோர் முன்னிலையில் ஆலயத்தின் பிரதான வாயில் உடைக்கப்பட்டு திறக்கப்பட்டது.

தேவாலயத்தின்  பிரதான பூசாரியின்  திடீர் மரணத்தின்  பின்னர்,  தேவாலய கடமைகளை  முன்னெடுத்துச்  செல்ல  அடுத்து   பொறுப்பேற்ற மற்றைய தரப்பினருக்கு தேவாலயத்தின் பிரதான சாவியை வழங்காததால் கண்டி பௌத்த விவகார பிரதி ஆணையாளர் கடந்த 23ஆம் திகதி விகாரைக்கு சீல் வைத்துள்ளார்.

இதனால்  கடந்த இரண்டு வாரங்களாக தேவாலயம் திறக்கப்படாததால், பூசை வழிபாடு செய்ய வந்த பக்தர்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.

பிரதான வாயில் பூட்டுகளை உடைத்து திறந்து பார்த்தபோது, தேவாலயத்திற்குள் இருந்த காய்கறிகள், பழங்கள் அழுகி கடும் துர்நாற்றம் வீசியதாக  தெரிவிக்கப்பட்டுள்ளன.

மேலும், தற்பொழுது தேவாலய கடமைகளை தற்காலிகமாக கவனிப்பதற்காக  இறந்தவரின் உறவினரான  மூத்தவரிடம் ஒப்படைத்ததாக அலவத்துகொட சமன் ஆலய பஸ்நாயக நிலமே அனுருத்த ஹேம பண்டார தெரிவித்தார்.

தேவாலயத்தை திறக்கின்ற போது அலவத்துகொடை பொலிஸார் தேவையான ஒத்துழைப்புக்களை  வழங்காமை தொடர்பில், கண்டி பௌத்த விவகார பிரதி ஆணையாளர்  மற்றும் அலவத்துகொட சமன் ஆலய பஸ்நாயக்க நிலமையும் பொலிஸ் மா அதிபர் மற்றும் மத்திய மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் ஆகியோரிடம் முறைப்பாடு செய்ய தீர்மானித்துள்ளனர் எனவும் தெரியவருகின்றன.