பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் டிஆர்இயு தொழிற்சங்கம் நாளை ஆர்ப்பாட்டம்

88 0

ரயில்வே தனியார்மயத்தை தடுத்து நிறுத்த வேண்டும், புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, டிஆர்இயு சார்பில் தெற்கு ரயில்வேயில் சென்னை, மதுரை, திருச்சி, சேலம், திருவனந்தபுரம், பாலக்காடு ஆகிய 6 கோட்டங்களில் உள்ள 100 மையங்களில் கடந்த ஜன.19 முதல் பிரச்சாரக் கூட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

சென்னை ரயில்வே கோட்டத்தில் ஜோலார்பேட்டை, அரக்கோணம், பொன்னேரி, நாயுடுபேட்டை, சூலூர்பேட்டை, பெரம்பூர் கேரஜ் ஒர்க்ஸ், பேசின்பாலம் பணிமனை, தண்டையார்பேட்டை உட்பட பல்வேறு இடங்களில் பிரச்சாரக் கூட்டங்கள் நடைபெற்றன. இந்த கூட்டங்களில் பழைய பென்சன் திட்டத்தில் உள்ள நன்மை, புதிய பென்சன் திட்டத்தில் உள்ள தீமை, தனியார் மயத்தால் சந்திக்கும் பிரச்சினைகள் உள்ளிட்டவை குறித்து தொழிலாளர்கள் மத்தியில் விளக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை மூர்மார்க்கெட் வளாகம் முன்பு, பெரும்திரள் ஆர்ப்பாட்டம் நடக்கவுள்ளது.

இதுகுறித்து தொழிற்சங்க நிர்வாகிகள் கூறியதாவது: ரயில்வே துறையில் பல்வேறு திட்டங்களை தனியாருக்கு தாரைவார்த்து வருகின்றனர். தனியார் மயம், இந்திய ஏழை எளிய மக்களுக்கு ரயில் பயணத்தை எட்டாமல் செய்துவிடும். பயணச்சீட்டுக்கு கொடுக்கப்படும் மானியங்களை தனியார்மயம் ஒழித்துவிடும். எனவே, தனியார் மயமாக்கலை கைவிட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கை வலியுறுத்தி நாளை (30-ம்தேதி) பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடக்கிறது என்றனர்.