செங்கையில் சில பகுதிகளில் கொத்துக்கொத்தாக காணப்படும் ஆப்பிரிக்க நத்தைகள், மிக வேகமாக இனப்பெருக்கம் செய்து, விவசாயிகளுக்கு அச்சுறுத்தலாக மாறி வருகின்றன. இவற்றைக் கட்டுப்படுத்த வேளாண், தோட்டக்கலை அதிகாரிகள் உரிய ஆலோசனை வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம் ஆத்தூர், திம்மாவரம், வில்லியம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் பெரும்பாலான விவசாயிகள் தங்களது தோட்டங்களில் தற்போது வாழை, தக்காளி, கத்தரி, மிளகாய், வெண்டைஉள்ளிட்ட தோட்டப் பயிர்களை விதைத்துள்ளனர்.
இதனிடையே பருவம் தவறி பெய்த மழையால் விவசாயிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர். மழைக்குப் பின் புதுவிதமான ஆப்பிரிக்க நத்தைகள் திடீரென்றுவாழை, புடலங்காய், பழ மிளகாய், பீர்க்கங்காய், பாகற்காய், தக்காளி, கத்தரி, மிளகாய், வெண்டை செடிகளின் மீது ஏறி, இலைகளை கடித்துத் தின்று வருகின்றன.
விளைச்சல் பாதிப்பு: செடிகள் பூத்துக் காய் பிடித்து முற்றுவதற்குள்ளாகவே செடிகளில் ஏராளமான ஆப்பிரிக்க நத்தைகள் புகுந்து, விளைந்து நிற்கும் பயிர்களைச் சேதப்படுத்தி விடுகின்றன. இதனால் விளைச்சல் பாதிக்கப்படுகிறது. இதைக் கண்டு விவசாயிகள் அதிர்ச்சியடைந்தனர். நத்தைகளை தினமும் அப்புறப்படுத்தினாலும் அவற்றை அழிக்க முடியவில்லை.
இரவில் விளைச்சலைச் சேதப்படுத்தும் இந்த நத்தைகள் பகலில் சூரிய ஒளி பட்டதும் மறைவான பகுதிகளுக்குள் நுழைந்து விடுகின்றன. இவற்றை தேடிப்பிடித்து அழிப்பதே விவசாயிகளுக்கு பெரும் வேலையாகிவிட்டது. தோட்டப் பயிர்களிலிருந்த ஆப்பிரிக்க நத்தைகள் தற்போது நெல் பயிரிலும் ஊடுருவி, நெற்பயிரில் உள்ள பச்சையத்தையும் உண்ணத் தொடங்கியுள்ளன.
இது தொடர்பாக வேளாண்மை, தோட்டக்கலைத் துறையினருக்குத் தகவல் கொடுக்கப்பட்டது. அலுவலர்களும் பார்வையிட்டனர். ஆனால் தீர்வை ஏற்படுத்தவில்லை என விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து தோட்டக்கலைத் துறை, வேளாண் அதிகாரிகளிடம் கேட்டபோது, “நேரில் ஆய்வு செய்து விவசாயிகளுக்கு உரிய தீர்வு வழங்கப்படும். மேலும், விவசாயிகள் எங்களிடம் நந்தை தொடர்பாக எந்த புகாரும் தெரிவிக்கவில்லை” என்றனர்.