மஹிந்தவை மோசமாக ஏமாற்றிய உதயங்க!

239 0

ரஷ்யாவின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதூங்க, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை கடந்த 9 வருடங்களாக ஏமாற்றி வந்ததாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அண்மையில் ரஷ்யாவுக்காக உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டிருந்தார். இதன்மூலம் மஹிந்த ஏமாற்றப்பட்ட விடயம் தெரிய வந்துள்ளது.

44 வருடங்களின் பின்னர் இலங்கை ஜனாதிபதி ஒருவர் ரஷ்யாவுக்கு விஜயம் மேற்கொண்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய கடந்த காலங்களில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் ரஷ்யாவுக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார்.

மஹிந்த ராஜபக்ச கடந்த 2011 மற்றும் 2012ம் ஆண்டு ரஷ்யாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டிருந்தார். அப்படி என்றால் ஜனாதிபதி மைத்திரியின் விஜயம் 44 வருடங்களின் பின்னர் இலங்கை அரச தலைவரின் முதலாவது பயணம் என கூறுவது எவ்வாறு என மஹிந்த மற்றும் அவருக்கு நெருக்கமானவர்கள் ஆராய்ந்துள்ளனர். இதன்போது உதயங்கவினால் மஹிந்த மிகவும் ஏமாற்றப்பட்ட விடயம் உறுதியாகியுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி ரஷ்யாவுக்கு சென்ற இரண்டு சுற்றுலா பயணங்களும் உத்தியோகபூர்வமற்றதென தெரியவந்துள்ளது. இந்நிலையில் அங்கு 9 வருடங்களாக தூதுவராக செயற்பட்ட உதயங்க, முன்னாள் ஜனாதிபதியிடம் குறித்த விஜயம் உத்தியோகபூர்வ விஜயம் என தெரிவித்துள்ளார்.

2011ஆம் ஆண்டு ரஷ்யாவின் லுமும்பா பல்கலைக்கழகத்தில் கலாநிதி பட்டம் பெற்றுக் கொள்வதற்கும், 2013ஆம் ஆண்டு இடம்பெற்ற உலக பொருளாதார மாநாட்டில் கலந்துக் கொள்வதற்கு மஹிந்த ரஷ்யாவுக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார்.

பொருளாதார மாநாட்டில் கலந்துக் கொண்ட சந்தர்ப்பத்தில் அப்போதைய ரஷ்யாவின் ஜனாதிபதி திமுத்ரி மெட்வெடேவ் என்பவரை மஹிந்த சந்தித்துள்ள போதிலும் அது உத்தியோகபூர்வமற்ற சந்தப்பு என கூறப்படுகின்றது.

இம்முறை ரஷ்ய விஜயத்தின் போது மைத்திரியை விமான நிலையத்தில் இருந்து அரச மரியாதையுடனே அழைத்து சென்றனர்.

40 வாகனங்களுடனான வாகன பேரணி உட்பட அரச மரியாதையுடன் மைத்திரி அழைத்து செல்லப்பட்ட நிலையில் அங்கு அவருக்கான அனைத்து செலவுகளும் ரஷ்யாவினால் ஏற்பட்டிருந்தது. எனினும் மஹிந்தவின் ரஷ்ய விஜயத்தின் செலவினை இலங்கை அரசாங்கம் ஏற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.