வாடகைத் தாய் மூலம் பெற்ற குழந்தைகளை கொண்டு செல்லலாம்: வெளிநாட்டவர்களுக்கு கம்போடியா அனுமதி

254 0

கம்போடியாவிற்கு வந்து வாடகைத் தாய் மூலம் குழந்தைகள் பெற்ற வெளிநாட்டு தம்பதிகள், அந்த குழந்தைகளை கொண்டு செல்வதற்கு கம்போடிய அரசு அனுமதி அளிக்க உள்ளது.

குழந்தைப் பேறு இல்லாத தம்பதியர் வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்வது தற்போது அதிகரித்து வருகிறது. வாடகைத் தாய் வர்த்தகத்திற்கு தாய்லாந்து மற்றும் இந்தியாவில் தடை விதிக்கப்பட்டுள்ளது. அண்டை நாடான கம்போடியாவில், வெளிநாட்டின வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொள்வதற்காக கம்போடியை பெண்களை அணுகுவது அதிகரித்தது.

இதில் பல்வேறு சட்ட விதிமீறல்களும், மோசடிகளும் கண்டறியப்பட்ட நிலையில், வாடகைத் தாய் வர்த்தகத்திற்கு கம்போடியா கடந்த ஆண்டு தடை விதித்தது. அத்துடன், வாடகைத் தாய் மூலமாக பிறக்கும் குழந்தைகளுக்கு சட்டப்பூர்வமான பிறப்பு சான்றிதழ் வழங்கப்பட மாட்டாது என்றும் அறிவித்தது. எனவே, வெளிநாட்டினர், வாடகைத் தாய் மூலம் பிறந்த குழந்தைகளை கம்போடியாவில் இருந்து வெளியில் கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

தற்போது அந்த விதியில் சிறிய மாற்றம் செய்யும் திட்டத்திற்கு கம்போடிய பிரதமர் ஹூன் சென் ஒப்புதல் அளித்துள்ளார். அதன்படி, வாடகைத்தாய் வர்த்தகத்திற்கு தடை விதிக்கப்பட்ட காலத்திற்கு முன்னதாக கருவுற்று பிறந்த குழந்தைகளை மட்டும் கம்போடியாவில் இருந்து கொண்டு செல்வதற்கு அனுமதி அளிக்கப்பட உள்ளது.

இதுபற்றி உள்துறை அமைச்சக இணை செயலாளர் கூறுகையில், ‘தடை விதித்ததற்கு முன்பு பிறந்த குழந்தைகளை கொண்டு செல்ல பெற்றோருக்கு அனுமதி அளிப்போம். அதுவும் சட்டப்பூர்வமாகவும், டிஎன்ஏ சோதனை மூலமாகவம் அந்த குழந்தை அவர்களுடைய குழந்தைதான் என நிரூபிக்க வேண்டும்.

வாடகைத் தாயின் கணவரும், அது தனது குழந்தை இல்லை என சாட்சியளிக்க வேண்டும். வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்வதற்கான சரியான காரணத்தை பெற்றோர் தெரிவிக்க வேண்டும். இந்த விதிமுறைகளை மீறி குழந்தையை வெளி நாடுகளுக்கு எடுத்துச் செல்பவர்கள் மீது குற்றவியல் வழக்கு தொடரப்படும்’ என்றார்.

கம்போடியாவில் பெரும்பாலும் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த தம்பதிகளே, வாடகைத்தாய் மூலம் குழந்தைகள் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.