நிகழ்நிலைக் காப்புச் சட்டத்தை சான்றுரைப் படுத்தாதிருக்குமாறு சபாநாயகரை கோருவோம் – சுமந்திரன்

78 0

உயர் நீதிமன்றத்தினால் பரிந்துரைக்கப்பட்ட விடயங்கள் உள்ளீர்க்கப்படும் வரையில் நிகழ்நிலைக் காப்புச் சட்டத்தில் கையொப்பமிடாதிருக்குமாறு சபாநாயகரிடத்தில் கோரிக்கை விடுக்கவுள்ளதாக இலங்கை தமிழரசுக்கட்சியின் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் சம்பந்தமாக அவர் மேலும் தெரிவிக்கையில்,நிகழ்நிலைப் காப்புச் சட்டமூலம் நிறைவேற்றுவதற்காக கொண்டுவரப்பட்டபோது அதற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

அவ்வாறு மனுத்தாக்கல் செய்யப்பட்ட நிலையில், உயர்நீதிமன்றம் சதாரண பெரும்பான்மையுடன்  அச்சட்ட மூலத்தினை நிறைவேற்றுவதாக இருந்தால் சில பரிந்துரைகளைச் செய்திருந்தது.

ஆனால், பாராளுமன்றத்தில் குறித்த சட்டமூலம் நிறைவேற்றப்பட்டபோது எமக்கு அதில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்கள் சம்பந்தமாக குழு நிலையில் தெளிவாக வழங்கப்படவில்லை.

அத்தோடு அத்த திருத்தங்கள் 12 மணிக்கு முன்னதாக பாராளுமன்றத்தில் எமக்கு வழங்கப்பட வேண்டும் என்ற முறைமையும் உள்ளது.

ஆகவே உயர்நீதிமன்றத்தினால் பரிந்துரைக்கப்பட்ட விடயங்களில் அதில் உள்ளீர்க்கப்பட்டுள்ளனவற்றை மீளாய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டும்.

தற்போதைய நிலையில் நான் 13 விடயங்களை உயர்நீதிமன்றத்தினால் குறிப்பிட்டும் அவை உள்ளீர்க்கப்படவில்லை என்பதை கண்டறிந்துள்ளேன்.

அதன்பின்னர் அதனை சபையில் சுட்டிக்காட்டி சபாநாயகரிடத்தில் எழுத்துமூலமாக வழங்கினேன். அதனை சட்டமா அதிபரின் பிரதிநிதிகளிடத்தில் வழங்குவதாக அவர் குறிப்பிட்டார்.

அதன் பின்னர் அத்திருத்தங்களை அமைச்சர் குழுநிலையில் இணைத்துக்கொள்வார் என்று குறிப்பிட்டார்கள்.

ஆனால் குழுநிலையில் அவை இணைத்துக்கொள்ளப்பட்டதா இல்லையா என்பது தற்போதைக்கு தெளிவாக இல்லை.

ஆகவே முழுமையாக ஆராயாத வரையில் குறித்த சட்டத்தில் கையொப்பமிடாதிருக்குமாறு நாம் சபாநாயகரைக் கோருவதற்கு உள்ளோம் என்றார்.