“ஈரானின் தென்கிழக்கு பகுதியை ஒட்டிய பாகிஸ்தான் எல்லை பகுதியில் துப்பாக்கி ஏந்திய மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கி சூட்டில் வெளிநாடுகளை சேர்ந்த ஒன்பது பேர் உயிரிழந்துள்ளனர் என ஈரான் செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. முன்னதாக இதே பகுதியில் இருதரப்பினர் இடையே மோதல் நடைபெற்ற நிலையில், இந்த சம்பவம் அரங்கேறி இருக்கிறது.
“இன்று காலை அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் துப்பாக்கி சூடு நடத்தியதில் ஈரானியர்கள் அல்லாத ஒன்பது பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் சரவன் நகரை அடுத்த சிர்கான் பகுதியில் உள்ள வீட்டில் வைத்து நடைபெற்றது, ” என ஈரானை சேர்ந்த செய்தி நிறுவனம் தெரிவித்து இருக்கிறது.
இந்த துப்பாக்கி சூடு சம்பவத்திற்கு இதுவரை பயங்கரவாத அமைப்புகள் எதுவும் பொறுப்பேற்கவில்லை. முன்னதாக பாகிஸ்தான் மற்றும் ஈரான் இடையே பயங்கர மோதல் நடைபெற்ற நிலையில், தற்போது இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .