பொற்பனைக்கோட்டை முதல்கட்ட அகழாய்வு நிறைவு: கண்டெடுக்கப்பட்ட பொருட்களை ஆவணப்படுத்தும் பணி தொடக்கம்

107 0

புதுக்கோட்டை மாவட்டம் பொற்பனைக்கோட்டையில் நடைபெற்று வந்த முதல்கட்ட அகழாய்வுப் பணி முடிவுற்றது. அடுத்தகட்ட அகழாய்வு அரசின் அனுமதிக்குப் பிறகு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சங்ககாலப் பகுதியாக விளங்கும் பொற்பனைக் கோட்டையில் தொல்லியல் துறையின் மூலம் கடந்த ஆண்டு மே மாதம் முதல் அகழாய்வுப் பணி நடைபெற்று வந்தது. அரண்மனைத் திடல் என்று அழைக்கப்படும் கோட்டையின் மையத்திலும், கோட்டைச் சுவரின் வடக்குப் பகுதியிலும் 15 அடி நீளம், அகலத்தில் 15-க்கும் மேற்பட்ட இடங்களில் குழிகள் தோண்டப்பட்டு, அகழாய்வுப் பணிகள் நடைபெற்று வந்தன.

அகழாய்வுப் பணிக்கான இயக்குநர் தங்கதுரை தலைமையிலான பணியாளர்கள் அகழாய்வில் ஈடுபட்டு வந்தனர். இதில், செங்கல் கட்டுமானம், பானை ஓடுகள், வட்ட வடிவிலான சுவர்,கண்ணாடி மணிகள், வட்ட சில்லுகள், பச்சைக் கல் மணிகள், படிகக் கல் மணிகள், தங்க மூக்குத்தி, சுடுமண் விளக்கு, தக்களிகள், எலும்பு முனைக் கருவி, கெண்டி மூக்குகள், மெருகேற்றும் கற்கள், பெரில் மணிகள், மனைக் கல், முக்கோண வடிவ செங்கற் கட்டி, இரும்பு பொருட்கள், மஞ்சள் கல் மணி உள்ளிட்ட பொருட்கள் கிடைத்துள்ளன.

மேலும், மெருகேற்றப்பட்ட பீங்கான் ஓடுகள், கூரை ஓடுகள்,துளையிடப்பட்ட பானை ஓடுகள், மேற்கத்திய நாட்டைச்சேர்ந்த ரவுலட் பானை ஓடுகள்கிடைத்துள்ளன. கோட்டைச் சுவரானது செங்கல் கட்டுமானத்தில் கட்டப்பட்டதும் ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டது.

இந்நிலையில், முதல்கட்ட அகழாய்வு முடிவுற்றது. சேகரிக்கப்பட்ட பொருட்களை ஆவணப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. அடுத்தகட்ட அகழாய்வுப் பணி, அரசின் அனுமதிக்குப் பின்னரே நடைபெறும் என தொல்லியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

இதுகுறித்து தொல்லியல்துறை அலுவலர்கள் கூறும்போது, “பொற்பனைக்கோட்டையுடன் சேர்த்து மொத்தம் 8 இடங்களில் அகழாய்வு மேற்கொள்வதற்கு அரசு அனுமதி அளித்தது. பொற்பனைக்கோட்டையில் தற்போதுமுதல்கட்ட அகழாய்வுப் பணிமுடிவடைந்துள்ளது. அகழாய்வின்போது ஏராளமான தொல்பொருட்கள் கிடைத்துள்ளன. அகழாய்வுக்காக தோண்டப்பட்ட குழிகளில் சில குழிகள் மட்டுமே மண்ணிட்டு மூடப்பட்டுள்ளன. கட்டுமானங்கள், தொல்பொருட்கள் கிடைத்துள்ள சில குழிகள் தார்ப்பாய் கொண்டு தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.

அகழாய்வில் கிடைத்தபொருட்களை ஆவணப்படுத்தி, அரசுக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்படும். அதன் பின்னர் அரசு அனுமதி அளிக்கும்போது, அடுத்தகட்ட அகழாய்வு தொடங்கும்” என்றனர்.