அமைச்சர் விரும்பியவர்களுக்கே ஸ்பெக்ட்ரம் ஒதுக்கப்பட்டுள்ளது

76 0

திமுக பைல்ஸ் பாகம் மூன்றின் 3-வது ஆடியோவை வெளியிட்ட தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, அமைச்சர் விரும்பியவர் களுக்கே ஸ்பெக்ட்ரம் ஒதுக்கப் பட்டுள்ளது என குற்றம்சாட்டியுள்ளார்.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை திமுக மீது ஊழல், முறைகேடு உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளை வைத்து வருகிறார். திமுகவுக்கு எதிராக அரசியல் செய்து வரும் அண்ணாமலை, ‘திமுக பைல்ஸ்’ என்ற பெயரில் ஊழல் பட்டியலை வெளியிட்டு வருகிறார். கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் ‘திமுக பைல்ஸ் பாகம் ஒன்றை’ வெளியிட்டார்.

அதனைத் தொடர்ந்து ஜூலை மாதம் ‘திமுக பைல்ஸ் பாகம் இரண்டை’ வெளியிட்டார். அதில், அரசுத் துறைகளில் ஒப்பந்த பணிகளில் நடந்திருந்த முறைகேடுகள் குறித்த குற்றச்சாட்டுகள் இடம் பெற்றிருந்தன. ‘திமுக பைல்ஸ் பாகம் மூன்று’ இதையடுத்து ‘திமுக பைல்ஸ் பாகம் மூன்று’ என பெயரிலான தொலைபேசி உரையாடல்களை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டு வருகிறார். இதுவரை அவர் வெளியிட்ட உரையாடல்களில், திமுக எம்.பி.-க்கள் டி.ஆர்.பாலு, ஆ.ராசா ஆகியோர் தனித்தனியே முன்னாள் உளவுத்துறை அதிகாரி ஜாபர் சேட் உடன் பேசியதாக அண்ணாமலை தெரிவித்திருந்தார்.

இதைத் தொடர்ந்து ‘திமுக பைல்ஸ் பாகம் மூன்றின்’ 3-வது ஆடியோ பதிவை அண்ணாமலை எக்ஸ் வலைதள பக்கத்தில் நேற்று வெளியிட்டார். அதில், திமுக எம்.பி ஆ.ராசா, முன்னாள் உளவுத்துறை அதிகாரி ஜாபர் சேட் இடையிலான மற்றொரு தொலைபேசி உரையாடல்கள் இடம் பெற்றுள்ளதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

வழக்கு குறித்து உரையாடல்: உரையாடலில், ஒரு வழக்கு விசாரணை கையாளப்படுவது குறித்து பேசுகிறார்கள். ஆனால், வழக்கின் விவரம் ஆடியோவில் தெரிவிக்கப்படவில்லை.

இது தொடர்பாக எக்ஸ் வலைதளப் பதிவில் அண்ணாமலை, “2 ஜி வழக்கின் முக்கிய குற்றவாளி ஆ.ராசா, முன்னாள் உளவுத்துறை அதிகாரி ஜாபர் சேட் இடையேயான உரையாடல்களை வெளியிட்டுள்ளோம். ஏற்கெனவே உருவாக்கி வைத்திருந்த கதைகள் மூலம் சிபிஐ விசாரணையை தடம் மாறச் செய்துள்ளனர். அமைச்சர் விரும்பியவர்களுக்கே ஸ்பெக்ட்ரம் ஒதுக்கப்பட்டு, அனைத்து விஷயங்களும் மூடி மறைக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

அண்ணாமலை அடுத்தடுத்து வெளியிட்ட 2 ஆடியோக்கள் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.