‘மயில்போல பொண்ணு ஒன்னு’ பாடல் ஒலிக்க பவதாரிணியின் உடல் அடக்கம்

70 0

‘மயில்போல பொண்ணு ஒன்னு, கிளிபோல பேச்சு ஒன்னு’ பாடல் ஒலிக்க இசையமைப்பாளர் இளையராஜாவின் மகளும், திரைப்படப் பின்னணிப் பாடகியுமான பவதாரிணியின் உடல் தேனி அருகே நேற்று அடக்கம் செய்யப்பட்டது.

இசையமைப்பாளர் இளையராஜாவின் மகள் பவதாரிணி (47). திரைப்படப் பின்னணிப் பாடகியான இவர் 1984-ல் வெளியான `மை டியர்குட்டிச் சாத்தான்’ படத்தில் குழந்தைப் பாடகியாக அறிமுகமானார். தொடர்ந்து, பல படங்களில் பாடல்களைப் பாடியுள்ளார்.

‘பாரதி’ என்ற திரைப்படத்தில் ‘மயில்போல பொண்ணு ஒன்னு, கிளி போல பேச்சு ஒன்னு’என்ற பாடலைப் பாடியதற்காக பவதாரிணிக்கு சிறந்த பின்னணிப் பாடகிக்கான தேசிய விருது வழங்கப்பட்டது. கடந்த சில மாதங்களாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த பவதாரிணி இலங்கையில் ஆயுர்வேத சிகிச்சை பெற்றுவந்தார். அங்கு அவர் சிகிச்சைபலனின்றி உயிரிழந்தார். அவரது உடல் நேற்று முன்தினம் சென்னைக்குக் கொண்டுவரப்பட்டு, இளையராஜா வீட்டில்அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. பின்னர், தேனி மாவட்டத்துக்கு கொண்டுவரப்பட்டது.

தேனி லோயர்கேம்ப் குருவனூத்து பாலம் அருகே இளையராஜாவுக்குச் சொந்தமான பங்களா உள்ளது. அங்கு நேற்று காலை கொண்டு வரப்பட்ட பவதாரிணியின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

இந்த வளாகத்தில்தான் இளையராஜாவின் தாயார் சின்னத்தாய், மனைவி ஜீவா ஆகியோரது உடல்கள் அடக்கம் செய்யப்பட்டு, மணிமண்டபங்கள் கட்டப்பட்டுள்ளன.

பவதாரிணியின் சகோதரர்கள் கார்த்திக் ராஜா, யுவன் சங்கர்ராஜா, வெங்கட் பிரபு, பிரேம்ஜி, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தேனி எம்.பி. ரவீந்திரநாத், பேராசிரியர் கு.ஞானசம்பந்தன், திரைப்பட இயக்குநர் அமீர், நடிகர்கள் அரவிந்த், கிருஷ்ணா, டிரம்ஸ் சிவமணி உள்ளிட்டோர் பவதாரிணியின் உடலுக்கு மாலை அணிவித்து, அஞ்சலி செலுத்தினர்.

பவதாரிணியின் உடலைப் பார்த்து திரைப்பட இயக்குநர் பாரதிராஜா கதறி அழுதார். விமானம்மூலம் மதுரை வந்த இளையராஜா, பின்னர் காரில் நேற்று பிற்பகலில் லோயர்கேம்ப் வந்தார். கண்கலங்கியபடி இருந்த இளையராஜாவுக்கு, பாரதிராஜா ஆறுதல் கூறினார்.