நிகழ்நிலை பாதுகாப்புச் சட்டவாக்கத்தின் போது உயர்நீதிமன்றின் திருத்தங்கள் உள்வாங்கப்பட்டதாவென சட்டமா அதிபர் திணைக்களம் ஆராயும்

82 0

நிகழ்நிலைச் சட்டவாக்கத்தின்போது உயர் நீதிமன்றத்தின் பரிந்துரைகளுக்கு அமைவாக அனைத்து திருத்தங்களும உரிய முறையில் உள்வாங்கப்பட்டதா என்பது குறித்து சட்டமா அதிபர் திணைக்களம் ஆய்வுகளை நடத்துமென சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன அறிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் கடந்த 23 மற்றும் 24ஆம் திகதிகளில் விவாதம் நடத்தப்பட்டு நிகழ்நிலை பாதுகாப்புச் சட்ட மூலம் நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து, அச்சட்டமூலம்நிறைவேற்றப்பட்ட முறைமை தொடர்பிலும், உயர்நீதிமன்றம் சுட்டிக்காண்பித்த விடயங்கள் குழுநிலையில் திருத்தப்பட்டதா என்பது தொடர்பில் மீளாய்வுக்கு உட்படுத்துமாறு இலங்கை தமிழரசுக்கட்சியின் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் உட்பட எதிர்க்கட்சியினர் கோரிக்கை விடுத்திருந்தனர்.

இந்நிலையில் கருத்து வெளியிட்ட சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன, சட்டமூலங்கள் நிறைவேற்றப்பட்டதன் பின்னர் அவற்றை சட்டங்களாக அங்கீகரித்து சான்றுரைப்படுத்தி கையெழுத்திடப்படுவதற்கு முன்பு மேலும் சட்ட ஆய்வுக்கு உட்படுத்தப்படுகிறது.

குறிப்பாக, அச்சட்டங்கள் சட்ட நடைமுறைகளுக்கு இணங்குவதை உறுதி செய்வதற்கும் சாத்தியமான குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்கும் சட்டமா அதிபர் அலுவலகத்தால் ‘ஒவ்வொரு சட்டமூலங்களும்’ திருத்தங்களின் பின்னர் அத்தகைய ஆய்வுக்கு உட்படுத்தப்படுகிறது.

மேலும், சட்டமா அதிபரிடமிருந்து உறுதிப்படுத்தப்பட்ட பின்னர் பாராளுமன்ற அதிகாரிகள் குழு இரண்டாவது மீளாய்வை மேற்கொள்ளும்.

இச்செய்பாடுகள் நிறைவேற்றப்பட்டதன் பின்னரே நான் கையொப்பமிட்டு சான்றுரைப்படுத்துவது வழக்கமானது. அந்த வழக்கம் நிகழ்நிலை காப்புச் சட்டத்திற்கும் பொருந்தும் என்றார்.

முன்னதாக, நிகழ்நிலைப் பாதுகாப்புச் சட்ட மூலத்தின் இரண்டாவது வாசிப்பு 46 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது. சட்டமூலத்துக்கு ஆதரவாக 108 வாக்குகளும் எதிராக 62 வாக்குகளும் அளிக்கப்பட்டன.

அதன் பின்னர் சட்டமூலத்தின் மூன்றாம் வாசிப்பு வாக்கெடுப்பின்றி நிறைவேற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.