இலங்கை பாராளுமன்றத்தில் மக்களை அடக்கி ஒடுக்கும் சட்டங்கள் தான் கொண்டுவரப்படுகின்றன. 1979ஆம் ஆண்டு தமிழர்களுக்கு எதிராக கொண்டுவரப்பட்ட பயங்கரவாத தடைச்சட்டம் இன்று ஒட்டுமொத்த இலங்கை மக்களுமே இந்த சட்டத்தின் மூலமாக பாதிக்கப்பட்டு, இதன் வலியை உணர்ந்துகொண்டிருக்கின்றார்கள். எனவே, இந்த பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம், ஊடகங்களை அடக்கும் நிகழ்நிலை காப்புச்சட்டம் மீளப்பெறப்பட வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு காந்தி பூங்காவில் இன்று சனிக்கிழமை (27) கறுப்பு ஜனவரியை முன்னிட்டு ஊடக அடக்குமுறையை எதிர்த்து, காணாமலாக்கப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி வேண்டி இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட பின்னர், ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு மேலும் கூறுகையில்,
1979ஆம் ஆண்டு தமிழர்களுக்கு எதிராக 6 மாதத்துக்கு தற்காலிகமாக கொண்டுவரப்பட்ட பயங்கரவாத சட்டம் இன்று வரை தொடர்ச்சியாக இருக்கின்றது. இந்த நிலையில் ஊடகங்களையும் மக்களின் கருத்து சுதந்திரத்தையும் அடக்குவதற்காக இந்த நிகழ்நிலை காப்பு சட்டம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டிருக்கின்றது.
இந்த சட்டத்துக்கு வடகிழக்கு சேர்ந்த தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் கூட கை உயர்த்தி ஆதரவு கொடுத்திருக்கின்றார்கள். தமிழ் மக்களுக்காக தான் இச்சட்டங்கள் கொண்டு வரப்படுகின்றதோ என சந்தேகங்கள் எழுகின்றன. ஏனென்றால், கூடுதலான ஆர்ப்பாட்டங்கள் நில அபகரிப்புகள், காணாமலாக்கப்பட்டவர்களை கண்டுபிடிப்பதற்கான ஆர்ப்பாட்டங்கள் வட கிழக்கில் அதிகமாக இடம்பெறுகின்றன.
2009ஆம் ஆண்டு யுத்தம் மௌனிக்கப்பட்டதற்கு பின் ஒரு மௌன யுத்தம் வடகிழக்கை பௌத்த மதமாக்குவது, காணி அபகரிப்புக்கு பெரும்பான்மையான மக்களை குடியேற்றி எமது இன பரம்பலை குறைப்பதுமான ஒரு நிகழ்ச்சி நிரலில் அரசும் அரச அதிகாரிகளும் புத்த பிக்குகள் கூட உள்வாங்கப்பட்டுள்ளதை காண முடிகிறது.
இப்படியான காலகட்டங்களில் வட கிழக்கிலே மக்கள் கிளர்ந்து எழக்கூடாது என்பதற்காகவும் இந்தச் சட்டம் கொண்டுவரப்படுகிறது.
இந்நாட்டின் அரகலய போராட்டம் என்ற போராட்டங்கள் கூட இனி ஏற்படக் கூடாது எனவும் அரசுக்கு எதிராக மக்கள் கருத்து கூறக்கூடாது என்றும் அரசு நினைக்கிறது.
ஒன்றை மட்டும் இந்த அரசு உணர்ந்துகொள்ள வேண்டும். இன்றிருக்கும் அரசு நாளை மாறலாம். நாளை மாறும்போது தனக்கு சாதகமாக தற்போது இருக்கும் அரசு அங்கத்துவம் பெறுபவர்கள் கூட இந்தச் சட்டத்தினால் பாதிக்கப்படலாம்.
இச்சட்டத்தை நிறைவேற்றுவதற்கு பாராளுமன்றத்தில் கை உயர்த்திய பாராளுமன்ற உறுப்பினர்களும் அவர்களது ஆதரவாளர்கள் கூட இன்னொரு ஆட்சி மாற்றம் ஏற்படும்போது இச்சட்டத்தினால் பாதிக்கப்படலாம் என்பதை உணராமல், அவர்கள் இந்த சட்டத்துக்கு ஆதரவு கொடுத்திருக்கின்றனர்.
கடந்த காலங்களில் ஊடகவியலாளர்கள் கடத்தப்பட்ட, கொல்லப்பட்ட, ஊடக கலையகங்கள் எல்லாம் அடித்து நொறுக்கப்பட்ட வரலாறுகள் இருக்கின்றன. முப்பது நாற்பதுக்கு மேற்பட்ட தமிழ் ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். யாருக்குமே இன்று வரை நீதி கிடைக்கவில்லை. நீதி கிடைக்கும் என்று கூட எதிர்பார்க்க முடியாது.
2009 தனது குடும்ப உறுப்பினர்களை இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்ட உறவினர்கள் கூட இன்னும் எங்கு இருக்கின்றார்கள் என்று தெரியாமல் மக்கள் தவித்துக்கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கான நீதியை கேட்டுக்கொண்டிருக்கின்றார்கள். இந்த நீதியைக் கூட கொடுக்காத அரசு இப்படியானவர்களுக்கு நீதி கொடுக்குமா என்பது சந்தேகம்தான்.
இருந்தாலும் இன்னும் ஒரு கருத்தும் இருக்கிறது. ஊடகங்களை ஒழுங்குபடுத்தக்கூடிய ஒரு தேவையும் இருக்கிறது. தற்போது ஊடகங்களுக்கு அப்பால் சமூக வலைத்தளங்கள் ஊடாக சில பாதிப்புகளும் மக்களுக்கு ஏற்படுகிறது. குறிப்பாக சிலர் தற்கொலை செய்யுமளவுக்கு போலி முகநூல் மூலமாக சில பிரச்சாரங்கள் செய்யப்படுவதனால் அதனை கட்டுப்படுத்த வேண்டிய ஒரு தேவை அரசாங்கத்துக்கு இருக்கிறது.
இருந்தபோதும் அதை விடுத்து ஊடகங்களை அடக்கி, தனக்கு எதிரான கருத்துக்களை யாருமே கூறக்கூடாது என்றொரு நிலையில் தான் இந்த நிகழ்நிலை காப்புச் சட்டம் வருகிறது என்பதை நாங்கள் எல்லோரும் நன்றாக உணர்ந்து கொண்டிருக்கின்றோம். இதனை அரசாங்கம் மீளப்பெற வேண்டும்.
இந்த நிகழ்நிலை காப்புச் சட்டத்துக்கு எதிராக 56 அமைப்புகள் குரல் கொடுத்திருக்கின்றார்கள். எனவே, சர்வதேசத்தின் கவனம் இலங்கை அரசு மீது திரும்பி இருக்கின்றது. ஏற்கனவே பயங்கரவாத தடை சட்டத்தை உடனடியாக நீக்க வேண்டும் என்று சர்வதேசம் கூறுகின்றது.
பயங்கரவாத தடுப்புச் சட்டத்துக்கு பதிலாக பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் ஒன்றைக் கொண்டு வருவதற்கு அரசு சிந்திக்கிறது. எங்களை பொருத்தமட்டில் பயங்கரவாத தடுப்புச் சட்டமும் வேண்டாம்; பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமும் வேண்டாம்; ஊடகங்களை அடக்கும் இந்த நிகழ்நிலை காப்புச் சட்டமும் வேண்டாம் என்பதே எங்களுடைய உறுதியான நிலைப்பாடு என்றார்.