அரசாங்கத்துக்கு சொந்தமான இரண்டு கட்டடங்களை சிறைச்சாலைகளாக மாற்றியமைக்க தீர்மானம்

70 0

அரசாங்கத்துக்கு சொந்தமான இரண்டு கட்டடங்களை சிறைச்சாலை கட்டடங்களாக மாற்றியமைக்க நீதி, சிறைச்சாலைகள் நடவடிக்கை மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சு தீர்மானித்துள்ளது. சிறைச்சாலைகளில் தற்போது ஏற்பட்டுள்ள அதிக நெருக்கடிகளுக்கு தீர்வாகவே இந்த நடவடிக்கை எடுப்பதாக நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இதேவேளை, நாட்டில் இருக்கும் சிறைக்கைதிகளின் எண்ணிக்கை 32 ஆயிரத்துக்கும் அதிகமாகும். என்றாலும் சிறைச்சாலைகளில் சுமார் 13 ஆயிரம் கைதிகளை தடுத்துவைப்பதற்கான இட வசதியே இருப்பதாக நீதி அமைச்சு அறிவித்துள்ளது.

சிறைச்சாலைகளில் நிலவிவரும் நெருக்கடியை கட்டுப்படுத்தும் நோக்கில் ஹெந்தல பிரதேசத்தில் அமைந்திருக்கும் சிறுவர் வைத்தியசாலையின் சில கட்டடங்கள் மற்றும் மட்டக்களப்பில் அமைந்துள்ள பழைய வைத்தியசாலை ஒன்றின் கட்டடத்தை இதற்காக பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இந்த வைத்தியசாலை கட்டடங்களை சிறைச்சாலைகளாக மாற்றி, கைதிகளை தங்கவைப்பதற்கு பயன்டுத்துவது தொடர்பில் சுகாதாதர அமைச்சு கலந்துரையாடியிருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சினால் ஆரம்பிக்கப்பட்டுள்ள போதைப்பொருள் ஒழிப்பு நோக்கிலான ‘யுக்திய’ வேலைத்திட்டத்தின் மூலம் நாள்தோறும் நூற்றுக்கணக்கானவர்கள் கைதுசெய்யப்பட்டு வருகின்றனர்.

இவர்களில் பலர் நீதிமன்ற உத்தரவின் பேரில் சிறைச்சாலைகளில் தடுத்துவைக்கப்பட்டு வருகின்றனர். இதன் காரணமாகவே சிறைச்சாலைகளில் நெருக்கடி நிலைமை அதிகரித்துள்ளதாக நீதி அமைச்சு தெரிவித்துள்ளது.