குவாஹாட்டி: இந்தியாவின் அசாமை தளமாக கொண்டஆயுதம் ஏந்திய பிரிவினைவாத அமைப்பான உல்ஃபா உருவான 44 ஆண்டுகளுக்குப் பிறகு நேற்று முறைப்படி கலைக்கப்பட்டது. இந்த அமைப்பினர் தங்கள் ஆயுதங்களை இம்மாதம் அரசிடம் ஒப்படைக்க உள்ளனர்.
இறையாண்மை கொண்ட அசாமை உருவாக்கும் நோக்குடன் உல்ஃபா (அசாம் ஐக்கிய விடுதலை முன்னணி) அமைப்பு கடந்த 1979-ம்ஆண்டு வடக்கு அசாமின் சிவசாகரில் உருவானது. ஆயுதம் ஏந்திய இந்த பிரிவினைவாத அமைப்புஇ தொடர்ந்து அரசுக்கு எதிராக வன்முறையில் ஈடுபட்டு வந்தது. இதனால் கடந்த 1990-ல் இந்த அமைப்புக்கு மத்திய அரசு தடை விதித்தது.
இதையடுத்து உல்ஃபா அமைப்புக்கும் மத்திய அரசுக்கும் இடையேகடந்த 12 ஆண்டுகளாக நிபந்தனையற்ற பேச்சுவார்த்தை. நடைபெற்று வந்தது. இந்த பலனாக அசாம் மற்றும் மத்திய அரசுடன் இந்த அமைப்பு கடந்த டிசம்பர் 29-ம்தேதி முத்தரப்பு அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.
வன்முறையை கைவிடவும் தேசிய நீரோட்டத்தில் இணையவும் அந்த அமைப்பு ஒப்புக்கொண்டது.
இந்நிலையில் இந்த அமைப்பின் கடைசி பொதுக்குழு கூட்டம் சிபாஜர் நகரில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் முத்தரப்பு அமைதி ஒப்பந்தம் அடிப்படையில் உல்ஃபா அமைப்பை கலைப்பது என முடிவு எடுக்கப்பட்டது.
இதுகுறித்து உல்ஃபா பொதுச் செயலாளர் அனுப் சேத்தியா நேற்று கூறும்போது “எங்கள் அமைப்பின் 9 முகாம்களை சேர்ந்த 900 உறுப்பினர்களின் கூட்டம் மத்திய அசாமின் மங்கல்டோய் முகாமில் நடைபெற்றது. இதில்அமைப்பை கலைக்கும் முடிவுஅங்கீகரிக்கப்பட்டது. முகாம்கள்இருந்த நிலத்தை விவசாயத்துக்காக எங்கள் உறுப்பினர்களுக்கு அசாம் அரசு வழங்க வேண்டும். முகாம்களில் உள்ள ஆயுதங்கள் இம்மாதம் நடைபெறும் விழாவில்அரசிடம் முறைப்படி ஒப்படைக்கப்படும். அசாம் விகாஷ் மன்ச்சா என்ற புதிய சமூக அமைப்பு உருவாக்கப்படும். விருப்பமுள்ள எங்கள் உறுப்பினர்கள் இதில் சேரலாம். வளர்ச்சித் திட்டங்களின் பலன்களை பெறவும் தன்னிறைவு அடையவும் பொதுவான தளமாக இது இருக்கும்” என்றார்.
2011 பிப்ரவரியில் உல்ஃபா இரண்டு குழுக்களாக பிரிந்தது.அரபிந்த ராஜ்கோவா தலைமையிலான குழு வன்முறையை கைவிட்டு அரசுடன் பேச்சுவார்த்தைக்கு முன்வந்தது. பரேஷ் பரூவா தலைமையிலான குழு பேச்சுவார்த்தைக்கு எதிர்ப்பு தெரிவித்தது. ‘உல்ஃபா இன்டிபென்டன்ட்’ என்ற பெயரில் செயல்பட முடிவு செய்தது. மியான்மர் மற்றும் வடகிழக்கின் சில பகுதிகளில் முகாமிட்டுள்ள இக்குழுவில் 200 உறுப்பினர்கள் இருப்பதாக கூறப்படுகிறது.