தேர்தல் நாளில் வாக்களிக்க நேரம் ஒதுக்க வேண்டும்: வாக்காளர்களுக்கு கமல்ஹாசன் வலியுறுத்தல்

133 0

தேர்தல் நாளில் நேரத்தை ஒதுக்கி, கவனமாக வாக்களிக்க வேண்டும் என்று தேசிய வாக்காளர் தினத்தையொட்டி மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட வீடியோ பதிவில் கூறியிருப்பதாவது: கடந்த சட்டப்பேரவைத் தேர்தலிலும், மக்களவைத் தேர்தலிலும் தமிழகத்தின் சராசரிவாக்குப்பதிவு சுமார் 73 சதவீதம்.இதேநிலைதான் வரும் மக்களவை தேர்தலிலும் இருக்கப்போகிறது என்றால், வாக்களிக்காமல் இருப்போரின் எண்ணிக்கை 1 கோடி 67 லட்சமாக இருக்கும்.

கல்வி, வேலைவாய்ப்பு, மருத்துவம், பொருளாதாரம் என நம்மைச் சுற்றி நடக்கும் பல விஷயங்களில் மாற்றம் வேண்டும் என்றுஎதிர்பார்க்கிறோம்.

ஆனால் இதைமாற்றுவதற்கான வேளைவரும் போது சுமார் ஒன்றரை கோடி பேர் காணாமல் போய்விடுகின்றனர். இந்த ஆண்டு தேர்தல் வரப்போகிறது.

உங்களது வாக்கு இந்தியாவில் மட்டுமல்ல சர்வதேச அரசியலிலும் மாற்றத்தை உண்டு செய்யப்போகிறது. தேர்தலன்று சிறிய வேலை இருக்கிறது என வாக்களிக்காமல் விட்டுவிட வேண்டாம். அதுதான் பெரிய வேலை. ஊரை, மாநிலத்தை, நாட்டை, ஏன் உலகத்தையே மாற்றப் போகும் பெரிய வேலையைச் செய்யும் நாள்.அதற்கென சில மணி நேரத்தை ஒதுக்கி,கவனமாக வாக்களிக்க வேண்டும்.முடிவெடுக்கும் நாளில் ஜெயித்துக் காட்டுவோம். இவ்வாறு கமல்ஹாசன் தெரி வித்துள்ளார்.