பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த பிரஜை ஒருவரை யாழ்ப்பாண பொலிஸார் நேற்று புதன்கிழமை (24) கைது செய்து பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.
யாழ்ப்பாணம் காங்கேசன்துறை வீதியில் அமைந்துள்ள கடை ஒன்றில் இரண்டு பாகிஸ்தானியர்கள் பொருட்களை கொள்வனவு செய்துவிட்டு, பணத்தை செலுத்த முற்பட்டுள்ளனர்.
அவ்வேளை, அவர்கள் மீது சந்தேகம் எழுந்த காரணத்தினால் கடையில் இருந்தவர், அவர்களை சில கேள்விகள் கேட்டு விசாரிக்க ஆரம்பித்துள்ளார்.
அப்போது அந்த இரண்டு பாகிஸ்தானியர்களில் ஒருவர் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார்.
அதனையடுத்து, யாழ்ப்பாண பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட, சந்தேக நபர்களில் ஒருவரான பாகிஸ்தான் பிரஜையை பொலிஸார் பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணைக்கு உட்படுத்தியுள்ளனர்.
கைதான சந்தேக நபர், தான் பாகிஸ்தான் நாட்டில் இருந்து வந்துள்ளதாகவும், யாழ்ப்பாணம் கச்சேரியை அண்மித்த பகுதியில் உள்ள விடுதி ஒன்றில் தான் தங்கியிருப்பதாகவும் ஆரம்பகட்ட விசாரணைகளின்போது தெரிவித்துள்ளார்.
தப்பி ஓடிய மற்றுமொரு பாகிஸ்தானியர் தொடர்பில் எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.