ராமநாதன் கண்ணனை பதவிநீக்கும் விடயத்தில் நீதிசேவைகள் ஆணைக்குழு தலையிட முடியாது – சுமந்திரன்

248 0
மேல் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ள ராமநாதன் கண்ணனை பதவிநீக்கும் விடயத்தில் நீதிசேவைகள் ஆணைக்குழுவுக்கோ, சட்டத்தரணிகள் சங்கத்துக்கோ தலையீடு செய்ய முடியாது என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும், சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் இதனைத் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு சட்டத்தரணிகள் சங்கத்தின் உறுப்பினராக இருந்த ராமநாதன் கண்ணன், மேல்நீதிமன்ற நீதிபதியாக ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டு, யாழ்ப்பாண வலையத்துக்கு சேவையாற்றவுள்ளார்.
அவர் பதவி நியமனம் பெற்றதன் பின்னர் அவரை பதவியில் இருந்து நீக்குவதாக இருந்தால், ஒழுக்க பரிசீலனை அடிப்படையிலான விசாரணைகளின் பின்னரே, அதற்கான பரிந்துரையை முன்வைக்க முடியும்.
அதனைத் தவிர வேறெந்த வழியிலும் அவரை பதவி நீக்குமாறு நீதிசேவைகள் ஆணைக்குழு பரிந்துரைக்குமாக இருந்தால், அது யாப்புக்கு எதிரானதாகும் என்று சுமந்திரன் கூறியுள்ளார்.
அதேநேரம், அவரது நியமனத்துக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கும் தொடர்பிருப்பதாக வெளியான செய்திகளில் உண்மையில்லை என்பதையும் சுமந்திரன் சுட்டிக்காட்டியுள்ளார்.