மட்டக்களப்பு மாவட்ட பட்டதாரிகள் மோட்டார் சைக்கிளில் பவனியாக சென்று கவன ஈர்ப்பு போராட்டம் (காணொளி)

498 0

மட்டக்களப்பு மாவட்ட பட்டதாரிகள் இன்று மோட்டார் சைக்கிளில் பவனியாக சென்று கவன ஈர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.

கடந்த 42 தினங்களாக மட்டக்களப்பு காந்திபூங்கா முன்பாக மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சத்தியாக்கிரக போராட்டத்தை மேற்கொண்டுவருகின்றனர்.

மத்திய மாகாண அரசாங்கங்கள் தமக்கான நியமனங்களை வழங்கவேண்டும் என வலியுறுத்தி பெப்ரவரி மாதம் 22ஆம் திகதி தொடக்கம் மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சத்தியாக்கிரக போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

வேலைவாய்ப்பினை வழங்குவதற்கு அரசாங்கம் இரண்டுமாத காலம் அவகாசம் கோரியுள்ள நிலையில் அந்த அவகாசத்தினை தமக்கு எழுத்து மூலம் வழங்கவேண்டும் என தெரிவித்துள்ள பட்டதாரிகள் தமக்கான உரியபதில்கள் அதிகார பூர்வமாக வழங்கப்படும் வரையில் தமது போராட்டம் முன்னெடுக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் சத்தியாக்கிரக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் போராட்ட வடிவத்தினை மாற்றி தமது போராட்டங்களை முன்னெடுத்துவரும் நிலையில் அதன் ஒரு கட்டமாக இன்று ஆண், பெண் பட்டதாரிகள் மோட்டார் சைக்கிள்களில் கறுப்புக்கொடிகளை கட்டிக்கொண்டு கவனயீர்ப்பு பேரணியில் ஈடுபட்டனர்.

மட்டக்களப்பில் ஆரம்பமான இந்த பேரணி வந்தாறுமூலை கிழக்கு பல்கலைக்கழகம் வரையில் சென்று மீண்டும் கல்லடி பாலம் ஊடாக கல்லடி, நாவற்குடா விபுலானந்தா இசைநடன நிறுவகம் வரையில் சென்று மீண்டும் சத்தியாக்கிரக போராட்டம் நடைபெறும் இடத்திற்கு வருகைதந்தனர்.

நாட்களை கடத்தாமல் நாகரிகமாக நியமனம் வழங்கும் என்னும் தலைப்பில் 42வது நாள் தொழில்கேள் பேரணி என்னும் தலைப்பில் இந்த பேரணி நடைபெற்றது.