பிலக்குடியிருப்பு பகுதியில் மீள்குடியேறியுள்ள மக்கள், இதுவரை எவ்வித அடிப்படை வசதிகளுமின்றி வாழ்ந்து வருவதாகக் கவலை…(காணொளி)

338 0

முல்லைத்தீவு பிலக்குடியிருப்பு பகுதியில் மீள்குடியேறியுள்ள மக்கள், இதுவரை எவ்வித அடிப்படை வசதிகளுமின்றி வாழ்ந்து வருவதாகக் கவலை வெளியிட்டுள்ளனர்.

முல்லைத்தீவு கேப்பாப்பிலவு கிராமத்தில் கடந்த 1 மாதத்திற்கு முன்னர்

மீள்குடியேறிய மக்கள், பல இடர்பாடுகளை சந்தித்து வருவதாகத் தெரிவிக்கின்றனர்.

முல்லைத்தீவு கேப்பாப்புலவு கிராம அலுவலர் பிரிவின்கீழ் உள்ள பிலக்குடியிருப்பு பகுதி மக்கள் தங்களை தமது சொந்த இடங்களில் மீள்குடியேற்றுமாறு கோரி இவ்வருடம் ஜனவரி 31ஆம் திகதி முதல் பெப்ரவரி 28ம் திகதி வரை தொடர் கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டதையடுத்து, கடந்த மார்ச் மாதம் முதலாம் திகதி போராட்டத்தில் ஈடுபட்ட மக்;;களின் 42 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்பட்டன.

இதனையடுத்து கேப்பாப்பிலவு கிராமத்தில் 84 குடும்பங்கள் தமது சொந்த இடங்களில் மீள்குடியேறியுள்ளன.

இந்நிலையில், மீள்குடியேறிய மக்களுக்கான எந்தவித அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்கப்படாத நிலையில் குறித்த குடும்பங்கள் தறப்பாள் மற்றும் கொட்டகைகளில் வாழ்ந்து வருகின்றன.

குறிப்பாக குழந்தைகள், முதியோர், கர்ப்பிணிகள் என பலரும் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

குறித்த மக்கள் மீள்குடியேறிய போது இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தினால் உணவல்லாத பொருட்கள் மாத்திரமே வழங்கப்பட்டன.

இந்நிலையில், இதுவரை எவ்வித உதவிகளும் வழங்கவில்லை எனத் தெரிவிக்கும் மீள்குடியேறியுள்ள மக்கள், தமது நிலத்தைப் போராடிப் பெற்றதால் இவ்வாறு அரசாங்கத்தினால் பழிவாங்கப்படுவதாகவும் கவலை வெளியிட்டுள்ளனர்.