இறுதி வாக்காளர் பட்டியல் இன்று வெளியாகிறது

82 0

 தமிழகத்தில் வாக்களிக்க தகுதியானவர்கள் எத்தனை பேர் என்பதை வெளிப்படுத்தும் இறுதி வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்படுகிறது. மாவட்டங்களில் அந்தந்த ஆட்சியர்களும், சென்னை மாநகராட்சியில் ஆணையரும் வாக்காளர் பட்டியலை வெளியிடுகின்றனர்.

இந்திய தேர்தல் ஆணைய அறிவுறுத்தல்படி, ஆண்டுதோறும் ‘சிறப்பு சுருக்கமுறை திருத்தம்’ எனப்படும், வாக்காளர் பட்டியல் திருத்த பணிகள் செப்டம்பர் அல்லது அக்டோபரில் நடைபெறும். இதைத் தொடர்ந்து, ஜனவரியில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். ஜனவரி 1-ம் தேதியை தகுதி நாளாக கொண்டு, 18 வயது நிரம்பியவர்கள் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படுவார்கள்.

அந்த வகையில், இந்த ஆண்டுக்கான வாக்காளர் பட்டியல் திருத்த பணிகள் 2023 அக்டோபர் 17-ம் தேதி தொடங்கியது. அன்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதன் அடிப்படையில், 3 கோடியே 68 ஆயிரத்து 610 ஆண்கள், 3 கோடியே 10 லட்சத்து 54 ஆயிரத்து 571 பெண்கள், 8,016 மூன்றாம் பாலினத்தவர் என 6 கோடியே 11 லட்சத்து 31 ஆயிரத்து 197 வாக்காளர்கள் உள்ளனர். ஆண்களைவிட பெண்கள் 9 லட்சத்து 85 ஆயிரத்து 961 பேர் அதிகம் இருந்தனர்.

சோழிங்கநல்லூரில் அதிகபட்சம்: அதிகபட்சமாக சென்னை சோழிங்கநல்லூர் தொகுதியில்6 லட்சத்து 52 ஆயிரத்து 65 வாக்காளர்களும், குறைந்தபட்சமாக நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் தொகுதியில்1 லட்சத்து 69 ஆயிரத்து 30 வாக்காளர்களும் இருந்தனர்.

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்கம் செய்ய, முகவரி மாற்றம் மற்றும் திருத்தம் செய்வதற்கான மனுக்கள் அன்று முதல் பெறப்பட்டன. டிச.9-ம் தேதி வரை வாக்காளர் பட்டியல் திருத்த பணிகளுக்கான விண்ணப்பங்கள் நேரடியாகவும், ஆன்லைன் வாயிலாகவும் பெறப்பட்டன. வார நாட்களில் மனுக்கள் அளிக்க இயலாதவர்களுக்காகநவம்பர் 4, 5, 18, 19-ம் தேதிகளில் 67 ஆயிரம் வாக்குச்சாவடிகளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன. இதன்மூலம், பெயர் சேர்ப்பது உள்ளிட்டவற்றுக்காக 20 லட்சத்துக்கும் அதிகமான மனுக்கள் பெறப்பட்டன.

இந்த மனுக்கள் பரிசீலிக்கப்பட்டு, வாக்காளர் பட்டியல் தயாரிப்பு பணி நடந்து வந்த நிலையில், புயல், வெள்ளம் உள்ளிட்டவற்றால் பணிகள் தடைபட்டதால், இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடும் தேதி ஜனவரி 5-ல் இருந்து 22-ம்தேதிக்கு மாற்றப்பட்டது.

அந்த வகையில், தமிழகத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்படுகிறது. மாவட்டங்களில் அந்தந்த ஆட்சியர்களும், சென்னை மாநகராட்சியில் ஆணையரும் வாக்காளர் பட்டியலை வெளியிடுகின்றனர்.