இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் தெரிவுக்கான தேர்தலில் வாக்களிப்பதற்காக, மட்டக்களப்பில் இருந்து திருகோணமலைக்கு சென்ற தான் உட்பட 13 பேருக்கு வாக்களிக்க அனுமதி மறுக்கப்பட்டது. அதனால் தாங்கள் ஏமாற்றத்துடன் திரும்பியுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட மகளிர் அணி செயலாளர் ரஜனி ஜெயபிரகாஸ் தெரிவித்தார்.
இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் புதிய தலைவரைத் தேர்வு செய்யும் தேர்தல் திருகோணமலையில் ஞாயிற்றுக்கிழமை (21) இடம்பெற்றது.
இந்த தேர்தலுக்கு கட்சியின் உறுப்புரிமை கொண்ட கொழும்பு மற்றும் வடக்கு கிழக்கிலுள்ள 8 மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 350 பேருக்கு வாக்களிப்பதற்கான தகுதி செய்யப்பட்டு அவர்களுக்கான வாக்களிப்புக்கு பெயர்பட்டியல் அனுப்பப்பட்டிருந்தது
இதற்கமைய மட்டக்களப்பு மாவட்டத்தைச் 50 பேர் சென்றிருந்த நிலையில் வாக்களிப்பதற்கான பெயர் பட்டியலில் மகளிர் அணி செயலாளராகிய எனது பெயர் உட்பட 13 பேரின் பெயர்கள் வெட்டப்பட்டிருந்தன. வாக்களிக்க உட்செல்ல எங்களை அனுமதியளிக்கவில்லை.
இது தொடர்பாக மாவட்ட தலைவருக்கு அறிய படுத்தியும் அவர் எதுவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதேவேளை கொழும்பில் இருந்து கட்சியிலையோ, கட்சி கிளையிலையோ, மாவட்டகிளையிலையோ உறுப்புரிமை இல்லாத சிங்காரவேல் மலர்விழி என்பவரின் பெயர் பட்டியில் இடப்பட்டு அவர் வாக்களிக்க அனுமதி வழங்கப்பட்டு அவர் வாக்களித்துள்ளார்.
அதேவேளை அங்கு வாக்களிப்பதற்காக சென்றிருந்த பாராளுமன்ற தேர்தலில் வேட்பாளராக போட்டியிட்ட ரவிராஜ் சசிகலாவின் பெயர் உட்பட 7 மாவட்டங்களில் பலரது பெயர்கள் விடுபட்டிருந்தன. இதன் போது அங்கு அந்த மாவட்ட தலைவர்கள் செயற்பாட்டினையடுத்து சசிகலா உட்பட விடுபட்டிருந்த 7 மாவட்டங்களைச் சேர்ந்தவர்களை வாக்களிக்க அனுமதி வழங்கினர்.
ஆனால், மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த எங்கள் 13 பெயர்களை வெட்டி வாக்களிக்க அனுமதியளிக்காமை தொடர்பாகவும் யார்? எங்கள் பெயரை வெட்டினார்கள் என பல கேள்வி எழுப்பி வாக்குவாதத்தில் ஈடுபட்டோம் அதற்கு எந்தவிதமான பதிலும் இல்லை என்றார். .
அதேவேளை, அங்கிருந்த நாங்கள் ஸ்ரீ தரனுக்கு ஆதரவானவர்கள் என்பதால் உங்கள் பெயர் வெட்டப்பட்டுள்ளதாக ஒருவர் இரகசியமாக தெரிவித்தார் இவ்வாறான நிலையில் வாகளிப்பு முடிவுற்று முடிவு தெரிவிக்கப்பட்டது
இது தொடர்பாக கட்சி முன்னால் தலைவர் மாவை சேனாதிராஜா மற்றும் நிர்வாக செயலாளர் கணநாயகம் ஆகியோரிடம் எங்களது வாக்களிக்கும் உரிமையை மறுத்தமை தொடர்பாக முறையிட்டுள்துடன் இது ஒரு ஜனநாயக தேர்தலா? மட்டக்களப்பில் இருந்து திருகோணமலைக்கு வாக்களிப்பதற்காக சென்று வாக்களிக் அனுமதி மறுத்தமை பெரும் ஏமாற்றமானதும் கவலையானதுமாகும் என அவர் தெரிவித்தார்.