ஒரு நிகழ்ச்சி நிரலிலிருந்து வெளியேறி பிரிதொரு நிகழ்ச்சி நிரலுக்குள் சிறை பிடிக்கப்படுவதை தேர்தலின் மூலம் நாம் எதிர்பார்க்கவில்லை. இந்த ஆண்டு தேர்தலுக்குரிய ஆண்டாகக் குறிப்பிடப்படுகிறது. எனவே மேற்கத்தேய முறைகளின் கீழ் செல்லாமல் மக்களின் பசியைப் போக்கக்கூடிய தலைமைத்துவம் தெரிவு செய்யப்பட வேண்டும் என்று பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்தார்.
முகத்துவாரம் புனித ஜோன் தேவாலயத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை (21) இடம்பெற்ற விசேட ஆராதனையின் போதே பேராயர் இதனை தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில்,
இன்று நாம் வாழ்ந்துகொண்டிருக்கும் இலங்கைக்குள் காணப்படும் பிரச்சினைகளிலிருந்து எம்மால் ஒதுங்கியிருக்க முடியாது. மத தலைமைத்துவம் என்பது வழிபாட்டுத் தலங்களுக்குள் சென்று போதனை செய்துகொண்டிருப்பது மாத்திரமல்ல. மக்களுக்கு துயரம் ஏற்பட்டால், அவர்களுக்காக வீதிக்கு இறங்கி குரல் கொடுப்பதே உண்மையான தலைமைத்துவமாகும்.
இந்த ஆண்டு தேர்தலுக்கான ஆண்டாகும் என அனைவராலும் கூறப்படுகிறது. ஒரு நிகழ்ச்சி நிரலிலிருந்து வெளியேறி பிரிதொரு நிகழ்ச்சி நிரலுக்குள் சிறைபிடிக்கப்படுவதை தேர்தலின் மூலம் நாம் எதிர்பார்க்கவில்லை. நாட்டுக்காக அர்ப்பணிப்புடன் செயற்படுவதே எமது தேவையாகும். சில நியாயங்களுக்கு அடிமையாகி, வெளிநாடுகளில் நிராகரிக்கப்பட்டுள்ள நியாயங்களின் பின்னால் செல்வது பிரயோசனமற்றது.
அவற்றின் பின்னால் சென்று நாட்டின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியாது. இலங்கையில் காணப்படும் சுயநலவாத போக்கு முன்னேற்றத்துக்கு தடையாக உள்ளது. மேற்கத்தேய கலாசாரம் எமது நாட்டுக்கு பொருந்தாது. நாட்டிலுள்ள மக்களின் பசியைப் போக்கும் அரசியலே இலங்கைக்கு பொருத்தமானது. அவ்வாறு செயற்படுவதே தலைமைத்துவத்தின் பொறுப்பாகும் என்றார்.