தற்போதுள்ள ஆட்சி முறையை மாற்ற வேண்டும் என்ற மக்களினதும், தேசிய மக்கள் சக்தி கட்சியினதும் கொள்கை இன்று ஒன்றாக மாறியுள்ளதால், இந்த ஆண்டில் புதிய அரசாங்கத்துக்கான மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க கண்டியில் தெரிவித்துள்ளார்.
அனைத்து வகையிலும் மூழ்கிக்கொண்டிருக்கும் நாட்டை காப்பாற்ற புதிய மறுமலர்ச்சி யுகம் காலத்தின் கட்டாயத் தேவை எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
மல்வத்து மற்றும் அஸ்கிரி மகாநாயக்கரின் ஆசி பெற்ற பின்னர் கடந்த வெள்ளிக்கிழமை (19) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்,
தற்போதுள்ள ஆட்சி முறையை மாற்றுவது வெறும் அரசியல் வேலைத்திட்டம் அல்ல, தேசிய செயற்பாடு. புதிய மாற்றத்துக்காக மக்கள் தற்போது முன்வருகின்றனர்.
பொருளாதார ரீதியிலும் அனைத்து துறைகளிலும் நாட்டின் வீழ்ச்சிக்கு காரணமானவர்கள் இன்று இருந்த இடத்தில் இருந்து ஒரு படி முன்னேறி நாட்டை கட்டியெழுப்பியுள்ளதாக கூறப்படுவது நகைப்புக்குரிய விடயமாகும்.
ஆகவே, இந்தப் பேரினவாதக் கும்பலிடம் இருந்து நாட்டை விடுவித்து, நாட்டைப் புதிய பாதைக்கு வழிநடத்த வேண்டும். இதுவே தேசிய மக்கள் சக்தியின் இலக்காகும்.
மக்கள் வாக்குகள் தேசிய மக்கள் சக்தியிடம் இருப்பதை அறிந்த அரசாங்கம் தற்போது ஜனாதிபதித் தேர்தலை முதலில் நடத்துவதா அல்லது பொதுத் தேர்தலை நடத்துவதா என்ற குழப்பத்தில் உள்ளது.
எந்தத் தேர்தலை முதலில் நடத்தினாலும் அதனை எதிர்கொள்ள தேசிய மக்கள் சக்தி கட்சி தயாராக உள்ளது.
நாட்டில் மரக்கறிகளின் விலை பாரியளவில் அதிகரித்துள்ளது. தேவைக்கு ஏற்றவாறு விநியோகம் இல்லாதபோது விலை அதிகரிப்பது சந்தைக் கோட்பாடு. இந்த சூழலில் இதனை அரசாங்கம் தலையிட்டு முகாமைத்துவம் செய்ய வேண்டும் என்றார்.