இந்தியாவின் தமிழ்நாடு சிவசேனா அமைப்பு மற்றும் சாய் சமர்ப்பனா அறக்கட்டளை உள்ளிட்டவை இணைந்து சிலாபத்தில் வெங்கடாசலபதி தேவஸ்தானமொன்றை அமைக்கவுள்ளது. இதற்காக முன்னேஸ்வரம் தேவஸ்தானத்துக்கு சொந்தமான காணி வழங்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு சிவசேனா அமைப்பின் நிறுவனத் தலைவர் கே.சசிகுமார் தெரிவித்தார்.
கொழும்பு – தாஜ் சமுத்திரா ஹோட்டலில் நேற்று சனிக்கிழமை (20) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் மாநாட்டில் இதனை தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,
இந்திய – இலங்கை உறவை வலுப்படுத்தும் வகையில் எமது அறக்கட்டளை இலங்கையில் பல்வேறு சேவைகளை முன்னெடுத்து வருகிறது. அந்த வகையில், கடந்த ஆண்டு மலையகத்தை சேர்ந்த 3000 குடும்பங்களுக்கு ஆடைகள் வழங்கப்பட்டன.
இவ்வாண்டு இலங்கையின் சகல பகுதிகளிலும் வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள 5000 பாடசாலை மாணவர்களுக்கு அப்பியாசப் புத்தகங்கள் உள்ளிட்ட கற்றல் உபகரணங்களை வழங்க தீர்மானித்துள்ளோம்.
இந்நிலையில், இலங்கையில் வெங்கடாசலபதி ஆலயத்தை நிறுவுவதற்கும் முயற்சித்து வருகின்றோம். அதற்கமைய இதற்காக ஆரம்பத்தில் கொழும்பிலும், பின்னர் கதிர்காமத்திலும் காணி வழங்குவதாகக் கூறப்பட்டது. எனினும் அது வெற்றியளிக்கவில்லை.
எவ்வாறிருப்பினும் தற்போது புத்தளம் மாவட்டத்தில் சிலாபத்தில் அமைந்துள்ள முன்னேஷ்வரர் தேவஸ்தானத்துக்குரிய காணி ஒதுக்கிக் கொடுக்கப்பட்டுள்ளது.
சட்ட ரீதியாக குறித்த காணி எமக்கு வழங்கப்பட்டதன் பின்னர், இந்தியாவிலிருந்து முக்கிய பிரமுகர்களின் பங்கேற்புடன் பூமி பூஜை இடம்பெறும்.
அதன் பின்னர் இரண்டு ஆண்டுகளுக்குள் ஆலய நிர்மாணப்பணிகளை நிறைவு செய்ய எதிர்பார்த்துள்ளோம். இந்திய – இலங்கை உறவை வலுப்படுத்த வேண்டும் என்ற பிரதமர் மோடியின் எண்ணத்துக்கு அமைய எம்மால் இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுகிறது.
சாய் சமர்ப்பனா அறக்கட்டளை இதற்கு பிரதான அனுசரணை வழங்குகிறது. அத்தோடு மயூரபதி பத்தரகாளி அம்மன் தேவஸ்தான பரிபாலன சபையும் எமக்கு இந்நடவடிக்கைகளை உதவிகளை வழங்கி வருகிறது. இலங்கை – இந்தியாவுக்கிடையில் சிறந்த ஆன்மிக உறவை வலுப்படுத்துவதே எமது நோக்கமாகும். அதற்கமைய தமிழ், சிங்களம், வடக்கு, மலையகம் என எவ்வித பேதமுமின்றி நாம் சேவைகளை வழங்குவோம். இதில் எவ்வித அரசியல் நோக்கமும் இல்லை என்றார்.