குடியரசு தின விழாவை முன்னிட்டு சென்னை விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு

110 0

குடியரசு தின விழா வருகிற 26-ந் தேதி நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. குடியரசு தின விழா கொண்டாட்டங்களை சீா்குலைக்க சதித்திட்டம் தீட்டி இருப்பதாக மத்திய உளவுத்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து மத்திய உள்துறை அமைச்சகம் நாடு முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகளை அதிகரித்து உள்ளது.அதன்படி நாடு முழுவதும் உள்ள விமான நிலையங்கள், வழிபாட்டு தளங்கள், மக்கள் அதிகமாக கூடும் முக்கியமான ரெயில், பஸ் நிலையங்கள் போன்ற பகுதிகளில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளன.

சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்திலும் பாதுகாப்பு ஏற்பாடு அதிகரிக்கப்பட்டு 5 அடுக்கு பாதுகாப்பு முறை அமல்படுத்தப்பட்டு உள்ளது. விமான நிலையத்துக்கு வரும் வாகனங்களை, பன்னாட்டு மற்றும் உள்நாட்டு புறப்பாடு, வருகை பகுதி வளாகங்கள் அருகே நிறுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.

இருசக்கர வாகனங்களை அடுக்குமாடி நிறுத்துமிடத்தில் நிறுத்த நடவடிக்கை எடுக்க விமான பாதுகாப்பு அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.விமான நிலைய காா் பாா்க்கிங் பகுதியில் நீண்ட நாட்களாக நிற்கும் வாகனங்களை தீவிரமாக சோதனை செய்யவும் உத்தரவிடப்பட்டு உள்ளது. மத்திய தொழில் பாதுகாப்பு படையினரின் அதிரடி வீரர்கள் மோப்ப நாய்களுடன் சென்னை விமான நிலையத்தில் விமானங்கள் நிற்கும் பகுதிகளிலும் தீவிரமாக சோதனை செய்து கண்காணிக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.சென்னை விமான நிலையத்தில் பாா்வையாளா்கள் வருகைக்கான தடை ஏற்கனவே கடந்த 2 ஆண்டுகளாக தொடர்ச்சியாக அமலில் இருப்பதால் அதை மேலும் தீவிரமாக செயல்படுத்துகின்றனா். பாஸ்கள் வழங்குவதிலும் கடுமையான கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு உள்ளன.வருகிற 30-ந் தேதி வரை முக்கிய பிரமுகர்களுக்கான பாஸ் வழங்க தடை செய்யப்பட்டு உள்ளது.

சென்னை விமான நிலையம் முழுவதும் முழு பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. வரும் 30-ந் தேதி நள்ளிரவு வரை இந்த பாதுகாப்பு விதிமுறைகள் அமலில் இருக்கும்.தற்போது 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ள நிலையில் குடியரசு தின விழா நெருங்கும்போது பாதுகாப்பு மேலும் பலப்படுத்தப்படும் என விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர் .