தி.மு.க. இளைஞரணி மாநாடு தொடக்கம்: கட்சி கொடியை ஏற்றி வைத்தார் கனிமொழி எம்.பி.

96 0

தி.மு.க. இளைஞர் அணி 2-வது மாநில மாநாடு சேலத்தில் இன்று கோலாகலமாக நடைபெற்றது. இன்று காலை 9.15 மணி அளவில் கொடியேற்று நிகழ்ச்சியுடன் மாநாட்டு நிகழ்ச்சிகள் தொடங்கியது.மாநாட்டில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகிய இருவரும் ஒரே நேரத்தில் மாநாட்டு திடலுக்கு வந்தனர். உதயநிதி ஸ்டாலின் திறந்த ஜீப்பில் வெள்ளை நிற இளைஞர் அணியின் டி-சர்ட் அணிந்தபடி வருகை தந்தார். அவரை பார்த்ததும் கூடி இருந்த தி.மு.க. தொண்டர்கள், இளம் தலைவர் வாழ்க என கோஷம் எழுப்பினார்கள். அதனை தொடர்ந்து மு.க.ஸ்டாலினும் மாநாடு திடலுக்கு வருகை தந்தார். அவரை வாழ்த்தியும் கோஷங்கள் எழுப்பட்டன.

திராவிட நாயகன், கழக தலைவர், அண்ணன் தளபதி என்ற கோஷங்கள் எழுப்பி வரவேற்றனர்.தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், தி.மு.க. இளைஞர் அணி செயலாளரும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் முன்னிலையில் தி.மு.க. மாநில துணை பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி. தி.மு.க. கொடியை ஏற்றி வைத்து நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.மாநாட்டு திடலில் அமைக்கப்பட்ட 100 அடி உயர கொடி கம்பத்தில் கொடி ஏற்றப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் தி.மு.க. அமைச்சர்கள், தலைமை கழக நிர்வாகிகள், இளைஞர் அணியை சேர்ந்த மாநில நிர்வாகிகள் ஆகியோர் திரளாக கலந்து கொண்டனர். இளைஞர் அணி மாநில துணை செயலாளர் தூத்துக்குடி ஜோயல் தலைமையில் அனைத்து துணை செயலாளர்களும் பங்கேற்றனர்.

மாநாட்டுக்கு வந்த முக்கிய பிரமுகர்கள் மட்டுமே கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்ற இடம் அருகில் அனுமதிக்கப்பட்டனர். மற்ற நிர்வாகிகள், மற்ற தொண்டர்கள் தூரத்தில் நின்றபடி கொடியேற்ற நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.மாநாட்டு கொடியேற்ற நிகழ்ச்சியில் லட்சக்கணக்கான தி.மு.க. தொண்டர்கள் கலந்து கொண்டு வெல்லட்டும் வெல்லட்டும் தி.மு.க. வெல்லட்டும், வாழ்க வாழ்கவே தளபதி வாழ்கவே என வாழ்த்து கோஷங்கள் எழுப்பினார்கள். வாழ்த்து கோஷங்கள் விண்ணை பிளந்தது.இதையடுத்து தி.மு.க. கொடி கம்பம் அருகில் முன்னாள் நிறுவப்பட்டிருந்த தலைவர்கள் தந்தை பெரியார் , பேரறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி, பேராசிரியர் அன்பழகன் ஆகியோர் சிலைக்கு முதலமைச்சர் மாலை அணிவித்து மலர்கள் தூவி மரியாதை செலுத்தினார்.

மாநாட்டையொட்டி திடல் முழுவதும் தி.மு.க. தொண்டர்கள் நிரம்பி வழிந்தனர். மாநாட்டில் கடைகள் போடப்பட்டு இருந்தது. இந்த கடைகளில் தலைவர்களின் புகைப்படங்கள் விற்பனையானது. சேலம் மாநகரில் இருந்து மாநாட்டு திடல் வரையில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் வாழ்த்து பேனர்கள் வைத்திருந்தனர். வாழ்த்து பேனரில் தளபதி, சின்னவர், மாமன்னன், இளம் தலைவர் வருக… வருக… என்பன போன்ற வாசகங்கள் இடம் பெற்று இருந்தன.மாநாட்டில் பெத்தநாயக்கன்பாளையம் மட்டுமின்றி மாவட்டம் முழுவதும் விழாக்கோலம் பூண்டு இருந்தது. மாநாட்டுக்கு செல்லும் வழிநெடுகிலும் வாழை மரக்கன்றுகள் நடப்பட்டு, கொடி தோரணங்களும் கட்டப்பட்டு இருந்தன.