அரச சேவையாளர்களின் செலவுகளை கட்டுப்படுத்தும் சுற்றறிக்கை

47 0

அரச செலவுகள் உயர்வடைந்துள்ள நிலையில்,  அரச வருமானம் மட்டுப்படுத்தப்பட்டதால் அரச சேவையாளர்களின் செலவுகளை மட்டுப்படுத்தும் வகையில் நிதியமைச்சு விசேட புதிய சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளது.

அரச சேவையாளர்களுக்கு வழங்கப்படும் மேலதிக கொடுப்பனவு அவர்களின் அடிப்படை சம்பளத்தை அண்மித்ததாக அமையக் கூடாது. அத்துடன் அரச சேவையாளர்களுக்கு வழங்கபட்ட எரிபொருள் கொடுப்பனவு உள்ளிட்ட பல சலுகைகளுக்கு மட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளன.

அத்துடன் நட்டமடையும் அரச நிறுவனங்களை மறுசீரமைத்தல் அல்லது  அந்த நிறுவனங்களை மூடுவதற்கான செயற்பாடுகளை உடனடியாக முன்னெடுக்க வேண்டும் என அரச நிறுவனங்களின் பிரதானிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

பொருளாதார பாதிப்புக்கு மத்தியில் அரச செலவுகள் உயர்வடைந்துள்ள நிலையில் அரச வருமானம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதால் அரச சேவையாளர்களின் செலவுகளை மட்டுப்படுத்தும் வகையில் திறைச்சேரி செயலாளர்  மஹிந்த சிறிவர்தன விசேட சுற்றறிக்கை வெளியிட்டுள்ளார்.

சகல அமைச்சுக்களின் செயலாளர்கள்,மாகாண பிரதான செயலாளர்கள்,திணைக்களத்தின் பிரதானிகள்,மாவட்ட செயலாளர்கள்,அரச கூட்டுத்தாபனங்கள்,பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு மற்றும் அரசியலமைப்பு சபை அல்லது அரச நிறுவனங்களின் பிரதானிகள் அனைவருக்கும் புதிய சுற்றறிக்கை நேற்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

அரச செலவுகள் உயர்வடைந்துள்ள நிலையில் அரச வருமானம் மட்டுப்படுத்தப்பட்டதால் அரச சேவையாளர்களின் செலவுகளை மட்டுப்படுத்தும் வகையில் திறைசேரி செயலாளர் விசேட சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளார்.

இதற்கமைய அரச சேவையாளர்களுக்கான மேலதிக கொடுப்பனவு,விடுமுறை தின கொடுப்பனவு,பயணச் செலவுகள் மற்றும் ஏனைய செலவுகள் என்பன விசேட மானியங்கள் திட்டமிடலுக்கு உட்பட்டதாக அமைய வேண்டும்.

அத்துடன் சேவையில் இருத்தல் அல்லது சேவைக்கு சமூகமளித்தலை உறுதிப்படுத்த தவறும் பட்சத்தில் மேலதிக கொடுப்பனவு வழங்கப்பட மாட்டாது. மாதாந்த மேலதிக கொடுப்பனவு அடிப்படை சம்பளத்தை விட அதிகமாக கூடாது.

சாதாரண கடமைகளுக்கு வருகை தருதல் அல்லது வேறு போக்குவரத்து வசதிகளுக்காக இனிமேல் அரச நிதியை பயன்படுத்த முடியாது. சொந்த வாகனம் உள்ள அதிகாரிகள் மற்றும் போக்குவரத்து செலவுகளுக்காக செலவுகளை பெற்றுக் கொள்ளும் அதிகாரிகள் இனி எந்தச் சந்தர்ப்பத்திலும் இருப்பில் உள்ள வாகனத்தை பயன்படுத்த அனுமதி வழங்கப்படமாட்டாது. அத்துடன் எரிபொருள் தொடர்பில் விதிக்கப்பட்டுள்ள  விதிமுறைகளை மீறும் அதிகாரிகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

அரச அதிகாரிகள் வெளிநாடு செல்லும் போது அதனுடன் தொடர்புடைய வெளிநாட்டு நிறுவனம் அல்லது உரிய தரப்பினர் அந்த வெளிநாட்டு பயணத்துக்கான செலவுகளை முழுமையாக ஏற்றுக்கொள்ள வேண்டும். அரச நிதியை இனி வெளிநாட்டு பயணங்களுக்கு பயன்படுத்த முடியாது.

திறைசேரியின் முழுமையான அனுமதி இல்லாமல் அரச தேவைகளுக்காக கட்டிடங்களை வாடகை அடிப்படையில் பெறுவதை உடன் அமுலுக்கு வரும் வகையில் நிறுத்தப்பட்டுள்ளது.

புதிய சுற்றறிக்கைக்கு அமைய  தேசிய நிதியத்தை பாவிக்கும் போது புதிய செயற்திட்டங்கள் ஏதும் மறு அறிவித்தல் விடுக்கும் வரை ஆரம்பிக்க கூடாது. முகாமைத்துவ திணைக்களத்தின் முறையான வழிகாட்டலின்றி அரச சேவைக்கு ஆட்களை இணைத்துக் கொள்வதற்கு அனுமதி வழங்கப்படமாட்டாது.

அரச சேவையாளர்களுக்கான கூட்டங்கள்,செயற்திட்ட தெளிவூட்டல்கள்,மாநாடு மற்றும் பயிற்சி வழங்கல் என்பன நிகழ்நிலை முறைமை ஊடாக முன்னெடுக்கப்பட வேண்டும்.

அரச நிறுவனங்களில் மின்சாரம்,நீர்,தொலைபேசி சேவை,எரிபொருள் மற்றும் ஒப்புதல் வழங்கப்பட்ட சேவைகளுக்கான செலவுகளை மட்டுப்படுத்த வேண்டும். அதற்கான நடவடிக்கை நிறுவன மட்டத்தில் முன்னெடுக்கப்பட வேண்டும்.

கொள்கை அடிப்படையில் தற்போது தீர்மானிக்கப்பட்டுள்ளதற்கமைய நட்டமடையும் அரச நிறுவனங்களை  மறுசீரமைத்தல் அல்லது  அந்த நிறுவனங்களை மூடுவதற்கான செயற்பாடுகளை உடனடியாக முன்னெடுப்பதுடன்,சாதாரண சேவைகளுக்காக நிறுவனங்களை ஒன்றிணைத்தல்,கூட்டிணைக்கப்பட்ட சேவைகளை பயனுடையதாக்குதல்,அரச முயற்சியாண்மையின் நிதி நிலைமையை உறுதிப்படுத்தல் அத்தியாவசியமானது என புதிய சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.