அரசியல் களம் சூடு பிடித்துக்கொண்டு செல்கிறது. 2024 ஆம் ஆண்டு தேர்தல்களுக்கான வருடம் என்று ஏற்கனவே அரசாங்கத் தரப்பில் தெரிவிக்கப்பட்டு விட்டது. எனவே தேர்தல்களுக்கு தயாராகும் பணிகளில் சகல கட்சிகளும் ஈடுபட்டிருப்பதுடன் தற்போது கட்சி தாவல்களும் ஆரம்பித்திருக்கின்றன. அதுமட்டுமின்றி கூட்டணி அமைக்கும் செயற்பாடுகள், முகாம்களை அமைக்கும் நகர்வுகள் என்பனவும் தற்போது தீவிரமாக இடம்பெற்று வருகின்றன.
முதலில் எந்தத் தேர்தல்?
இந்த வருடத்தில் முதலில் ஜனாதிபதி தேர்தலும் பின்னர் பாராளுமன்ற தேர்தலும் நடைபெறும் என்று தெரிவிக்கப்படுகிறது. மறுபுறம் ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாக பாராளுமன்றத்தை கலைத்து ஜனாதிபதி பொது தேர்தலை நடத்துவதற்கும் சாத்தியம் இருப்பதாகவும் அரசியல் வட்டாரங்களில் எதிர்வுகூறல்கள் முன்வைக்கப்படுகின்றன. எனினும் இந்த இரண்டு தேர்தல்களும் இந்த வருடம் நடைபெறப்போகின்றது என்பது கிட்டத்தட்ட உறுதியாகின்றது. பாராளுமன்ற தேர்தல் இந்த வருடம் நடைபெறுமா அல்லது ஐந்து வருடங்கள் முடிவடைந்ததும் அடுத்தவருடம் நடைபெறுமா என்பது குறித்து சரியான முறையில் எதுவும் எதனையும் எதிர் கூற முடியாதுள்ளது.
ஜனாதிபதி தேர்தல்…
காரணம் பாராளுமன்ற தேர்தல் தொடர்பில் ஜனாதிபதிக்கு எந்த நேரத்திலும் எந்த முடிவையும் எடுப்பதற்கான அதிகாரம் இருக்கின்றது. ஆனால் ஜனாதிபதி தேர்தல் இந்த வருடம் நவம்பர் மாதத்துக்கு முன்னர் நடைபெற்றேயாகவேண்டும். கடந்த ஜனாதிபதி தேர்தல் 2019 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்றது. எனவே 21 ஆம் அரசியலமைப்பு திருத்தத்தின்படி ஜனாதிபதி பதவிக்காலம் 5 வருடங்களாக இருக்கின்றது. எனவே 2024 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்துக்கு முன்னர் ஜனாதிபதி தேர்தல் நடைபெற்றேயாக வேண்டும். அது அரசியலமைப்பு ரீதியாக கட்டாயமானது. எனவே அதற்கே எவ்வாறு காய் நகரத்தல்கள் இடம் பெறுகின்றன என்பதை தற்போது பார்க்க வேண்டி இருக்கின்றது.
களத்தில் நிற்பவர்கள்
ஜனாதிபதி தேர்தலை பொறுத்தவரையில் ரணில் விக்ரமசிங்க, சஜித் பிரேமதாச, அனுரகுமார திசாநாயக்க, தம்மிக்க பெரெரா, நாமல் ராஜபக்ஷ, மைத்திரிபால சிறிசேன தமிழ் கட்சிகளின் சார்பில் ஒரு வேட்பாளர் உள்ளிட்டோர் தற்போது களத்தில் வெகுவாக பேசப்படுகின்ற வேட்பாளர்களாக காணப்படுகின்றனர்.
ரணில் விக்ரமசிங்க
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஏனைய சில கட்சிகளை ஒருங்கிணைத்து ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளராக போட்டியிடுவார் என்று அரசியல் வட்டாரங்களில் நம்பகரமாக தெரிவிக்கப்படுகிறது. ஆனால் இதுவரை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இது தொடர்பாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கவில்லை. எனினும் ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவார் என்பது ஊர்ஜிதமாகின்றது.
மேலும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு தெரிவித்து தற்போது கூட்டணிகளும் முகாம்களும் அமைக்கப்பட்டு வருகின்றன. அண்மையில் பாராளுமன்ற உறுப்பினர்களான நிமல் லன்சா மற்றும் அனுர பிரியதர்ஷன யாப்பா உள்ளிட்ட சில பாராளுமன்ற உறுப்பினர்கள் முகாம் அமைக்கும் செயற்பாட்டில் ஈடுபட்டிருந்தனர். அந்த கூட்டணிக்கு கிட்டத்தட்ட பல பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவு வழங்குவர் என்றும் தெரிவிக்கப்பட்டது.
எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவும் ஐக்கிய மக்கள் சக்தி தலைமையில் ஒரு கூட்டணி அமைத்து ஜனாதிபதி தேர்தலில் களமிறங்குவார் என்று தெரிவிக்கப்படுகிறது. அந்த விடயம் தொடர்பாக தற்போது அவரது கட்சியினர் பல நகர்வுகளில் ஈடுபட்டு வருவதை காண முடிகிறது. முக்கியமாக தற்போது அந்த கட்சியின் பக்கம் சுதந்திர கட்சியில் இருந்து விலகிய ஷான் விஜயலால் இணைந்திருக்கின்றார். அதுமட்டுமின்றி டலஸ் அழகப் பெருமவின் அணியிலிருந்த டிலான் பெரெரா மற்றும் ஜீ.எல். பீரிஸ் உள்ளிட்டோரும் தற்போது சஜித்துடன் கூட்டணியில் இணைந்திருக்கின்றனர். மேலும் ஐக்கிய மக்கள் கூட்டணியை அமைக்கும் முயற்சிகளும் தீவிரமாக இடம்பெற்றுவருகின்றன.
ஜே.வி.பி.யின் அனுரகுமார திசாநாயக்க
மறுபுறம் ஜே.வி.பி. தலைமையிலான தேசிய மக்கள் சக்தியின் சார்பாக அனுரகுமார திசாநாயக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவார் என்று தெரிவிக்கப்படுகிறது. அந்த தரப்பிலும் கூட்டணி அமைக்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.
பொதுஜன பெரமுன என்ன செய்யும்?
ஸ்ரீலங்கா பொதுஜன பொதுஜன பெரமுன வேட்பாளரை களம் இறக்குமா? அல்லது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவு வழங்குமா? என்பது இதுவரை தெளிவு இல்லாமல் இருக்கின்றது. பொதுஜன பெரமுன சார்பாக போட்டியிடுவதற்கு தயார் என்று பாராளுமன்ற உறுப்பினர் தம்மிக்க பெரெரா அறிவித்திருக்கின்றார். அதுதொடர்பாக கட்சி மட்டத்தில் தற்போது பேச்சு வார்த்தைகள் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. ஆனால் எவ்விதமான தீர்மானமும் இன்னும் எடுக்கப்படவில்லை என்றே தெரிவிக்கப்படுகிறது. மேலும் பிரதமர் தினேஷ் குணவர்த்தன மற்றும் நாமல் ராஜபக்ஷ எம்.பி. உள்ளிட்டோரின் பெயர்களும் வேட்பாளர் விடயத்தில் விரிவாக பேசப்பட்டுவருகின்றன.
ஒருவேளை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு பொதுஜன பெரமுன ஆதரவு அளிக்கலாம் என்ற பேச்சுக்களும் அடிபடுகின்றன. பொதுஜன பெரமுனவின் ஒரு சில பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதிக்கு பகிரங்கமாக ஆதரவையும் தெரிவித்திருக்கின்றனர். ஆனாலும் கட்சி மட்டத்தில் எந்த தீர்மானமும் இதுவரை எடுக்கப்படவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது.
விமல் தரப்பு
அதேநேரம் பொதுஜன பெரமுன கூட்டிலிருந்து கடந்த நெருக்கடி காலத்தில் வெளியேறிய பாராளுமன்ற உறுப்பினர்களான விமல் வீரவன்ஸ, உதய கம்மன்பில, வாசுதேவ நாணயக்கார போன்ற தரப்பினர் இதுவரை ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் எந்த முடிவையும் அறிவிக்காமல் இருக்கின்றனர். அவர்கள் ஒரு கூட்டணியை அமைத்து பொது வேட்பாளர் ஒருவரை களம் இறக்குவார்களா அல்லது ஏதாவது ஒரு தரப்புக்கு ஆதரவு வழங்குவார்களா என்பது இதுவரை தீர்மானம் இல்லாமல் இருக்கின்றது. எனவே இந்த விடயமும் தற்போது அரசியலில் பேசு பொருளாகவே இருக்கின்றது.
தமிழ் பொது வேட்பாளர்
இதேவேளை அடுத்த ஜனாதிபதி தேர்தலில் வடக்கு கிழக்கு மக்களின் சார்பில் ஒரு தமிழ் பொது வேட்பாளரை களமிறக்க வேண்டும் என்ற யோசனைகளும் வடக்கில் முன்வைக்கப்பட்டு வருகின்றன. முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜனநாயக தேசிய கூட்டணியின் பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன் இந்த விடயத்தை வலியுறுத்தி வருகின்றார். அதேபோன்று வேறு பல பாராளுமன்ற உறுப்பினர்களும் இந்த கருத்தை முன்வைத்து வருகின்றனர். வட மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரணம் இந்த கருத்தை ஆதரித்திருக்கின்றார். சகல கட்சிகளும் ஒருமித்து கோரிக்கை விடுத்தால் தான் தமிழ் பொது வேட்பாளராக போட்டியிட தயார் என்றும் விக்கினேஸ்வரன் அறிவித்திருக்கின்றார். எனவே இம்முறை ஜனாதிபதி தேர்தல் பல்வேறு வகையிலும் பரபரப்பை அதிகரிக்கும் ஒன்றாகவே காணப்படுகின்றது.
மைத்திரிபால சிறிசேன
இது இவ்வாறிருக்க ஜனாதிபதி தேர்தலில் மைத்திரிபால சிறிசேன என்ன செய்யப் போகிறார் என்பதும் மிக முக்கியமான ஒரு கேள்வியாக இருக்கின்றது. காரணம் மைத்திரிபால சிறிசேன தற்போது சுதந்திர கட்சியின் தலைவராகவும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் முக்கியஸ்தராகவும் உள்ளார். அவர் 2015 ஆம் ஆண்டில் இருந்து 2019 ஆம் ஆண்டு வரை ஜனாதிபதியாக பதவி வகித்தார். அரசியலமைப்பின்படி அவர் இன்னும் ஒருமுறை ஜனாதிபதியாக பதவி வகிக்க முடியும். எனவே சுதந்திர கட்சி இம்முறை தனித்து ஒரு வேட்பாளரை களமிறக்குமா? அல்லது ஏதாவது ஒரு பிரதான வேட்பாளர் ஆதரவளிக்குமா? என்பது இன்னும் அறிவிக்கப்படவில்லை. சுதந்திர கட்சியின் சார்பில் மைத்திரிபால சிறிசேன களமிறங்குவாரா என்பதும் அரசியல் களத்தில் ஒரு பாரிய பேசுபொருளாக காணப்படுகிறது.
அதிகரிக்கும் பரபரப்பு
அந்த வகையில் அடுத்து நடைபெற போகின்ற ஜனாதிபதி தேர்தல் என்பது மிக மிக முக்கியத்துவமிக்கதாக காணப்படுகிறது. காரணம் 2022 ஆம் ஆண்டு இந்த நாட்டில் பாரியதொரு பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. அது அரசியல் நெருக்கடியாக பரிணாமம் அடைந்தது. ஜனாதிபதி பதவியில் மாற்றமும் ஏற்பட்டது. ஆனாலும் பொதுஜன பெரமுனவே தொடர்ந்தும் ஆளுங்கட்சியாக இருக்கின்றது. இந்நிலையில் நெருக்கடியின் பின்னரான மீட்சி காலத்தில் நடைபெறப்போகும் தேர்தல் என்பது மிக முக்கியமாகும்.
தற்போது மக்களின் ஆதரவை பெற்றுக் கொள்ளும் முயற்சிகளில் சகல கட்சிகளும் ஈடுபட்டு வருகின்றன. தேர்தல் முடிவுகள் எவ்வாறு அமையப் போகின்றன? மக்கள் எவ்வாறான தீர்ப்பை வழங்கப் போகின்றனர்? என்பது பேசுபொருளாக காணப்படுகிறது. நெருக்கடியின் பின்னர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கம் பல்வேறு வேலைத்திட்டங்களை மேற்கொண்டு வருகின்றது. ஆனால் இன்னும் சவால்கள் நீடித்துக் கொண்டிருக்கின்றன. வாழ்க்கை செலவு உயர்வு, வருமானம குறைவு, தொழில் பிரச்சினை, வறுமை என்பன இன்னும் தொடர்ந்து கொண்டு இருக்கின்றன. எனினும் கடந்த 2022 ஆம் ஆண்டு நடுப்பகுதியுடன் ஒப்பிடுகையில் நாடு குறிப்பிடத்தக்களவில் முன்னேற்றம் அடைந்திருக்கின்றது என்பதை யாரும் தவிர்க்க முடியாது.
இந்த பின்னணியிலேயே ஜனாதிபதி தேர்தலை நோக்கி சகலரும் காய்களை நகர்த்த ஆரம்பித்துள்ளனர். ஜனாதிபதி ரணில், எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ, தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுர குமார திசாநாயக்க மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் தம்மிக்க ஆகியோர் தற்போது களத்தில் வெகுவாக பேசப்பட்டு கொண்டிருக்கின்றனர்.
யார் வேட்பாளர்?
ஆனால் யார் இதில் போட்டியிடுவார்கள் என்பதை இன்னும் எதிர் கூற முடியாமல் இருக்கின்றது. தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கின்றது. எனவே அரசியல் நகர்வுகளும் தீவிரமடைந்து கொண்டிருக்கின்றன. விடியும் வேளையில் நல்ல நல்ல விளையாட்டுக்களை எதிர்பார்க்க முடியும் என்று அரசியலில் கூறுவது உண்டு. அந்த வகையில் எதிர்வரும் வாரங்களில் எதிர்வரும் மாதங்களில் தேர்தல் தொடர்பில் மிக தீர்க்கமான அறிவிப்புக்களை எதிர்பார்க்கலாம். கட்சி தாவல்கள் மேலும் இடம்பெறலாம். என்ன நடக்கப்போகிறது என்பதை மக்களும் பார்த்துக் கொண்டிருக்கின்றனர். இறுதியில் நாட்டின் வாக்காளர்களே இறுதி தீர்மானத்தை எடுக்க போகின்றனர். யாரை இந்த நாட்டின் தலைவராக நியமிப்பது என்பதை மக்களை தீர்மானிப்பர். அரசியல் களம் சூடு பிடித்திருக்கின்றது. அடுத்தடுத்த கட்டங்களில் என்ன நடக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
ரொபட் அன்டனி