மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாலமுனை பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்டிருந்த இரு பாரிய கோழி பண்ணைகளை உடைத்து கொள்ளையிட்ட தந்தையையும் மகனையும் வியாழக்கிழமை மாலை (11) காத்தான்குடி பொலிஸார் கைது செய்துள்ளதாக காத்தான்குடி பொலிஸ் நிலைய குற்றத் தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி ஏ எம் எஸ் ஏ ரஹீம் தெரிவித்தார்.
குறித்த இரு கோழிப் பண்ணைகளையும் மூடி விட்டு பண்ணைகளின் உரிமையாளர்கள் தமது வீடுகளுக்கு சென்றிருந்த நிலையில் கடும் மழையை பயன்படுத்தி இரவு நேரத்தில் குறித்த பண்ணைகளின் முன்பக்கத்தை உடைத்து உள்ளே நுழைந்த திருடர்கள் அங்கு பொருத்தப்பட்டிருந்த தண்ணீர் இயக்கும் இயந்திரங்கள், மின்விசிறிகள், ஜெனரேட்டர்கள் குளிர்சாதன பெட்டி, தோட்டத்துக்கு பயன்படுத்தப்படுகின்ற பெருமளவிலான பொருட்களை கொள்ளையிட்டு சென்றுள்ளனர்.
கொள்ளையிட்ட பொருட்களை கைதுசெய்யப்பட்டுள்ள சந்தேக நபர்கள் காத்தான்குடி மற்றும் பாலமுனை பிரதேசங்களில் உள்ள தமது வீடுகளில் பதுக்கி வைத்திருந்த போது பொது மக்களிடம் இருந்து கிடைத்த தகவலை அடுத்து காத்தான்குடி பொலிஸார் அவற்றை நேற்று கைப்பற்றியுள்ளனர்.
மட்டக்களப்பு மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியாச்சகர் அமல் ஏ எதிரிமான வின் ஆலோசனையின் பேரில் காத்தான்குடி பொலிஸ் நிலைய நிலைய பதில் பொறுப்பதிகாரி எஸ். கதிநாயக்கவின் வழிகாட்டலில் குற்ற தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி ஏ எம் எஸ் ஏ ரஹீம் தலைமையிலான பொலிஸ் குழுவினர் மேற்படி பொருட்களை மீட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட நபர்கள் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக காத்தான்குடி பொலிஸார் மேலும் தெரிவித்தனர். காத்தான்குடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.