கறுப்புயூலையில் எரியுண்டுபோன ஒற்றைஆட்சி – ச.ச.முத்து

570 0

black-july-28-thஈழத்து மனமெங்கும் துடைத்து எறிந்து
மறக்க முடியாவண்ணம் நிறைந்திருக்கும்
கறுப்புயூலை நினைவுகள்.

ஓற்றைஆட்சிக்குள் வாழும்
தேசியக்கனவு அன்றை நாட்களில்
தென்னிலங்கை தெருக்களின்
நடுவிலே வீசப்பட்டுக் கிடந்தன.

ஒன்றாகச் சேர்ந்து ஒருமித்தெழுந்து
வர்க்கப்புரட்சி செய்யும்
பொதுவுடமைப் புரட்சியின்
வெட்டரிவாள் அவர்கள் கையிலும்
சுத்தியல் எங்கள் கையிலுமாக
நிரந்தரமாக பிரிந்தநாட்கள் அவை.

சிங்களதேசக் கொடியில் நின்ற சிங்கம்
நீட்டிய வாளுடன் தமிழரின்
உயிர்குடிக்க சிங்களதெருக்கள்
ஒவ்வொன்றிலும் உலா வந்த நாட்கள் இவை.

காலம் காலமாக சிங்களதேசத்தின்
வேருக்கு நீர் பாய்ச்சிய தமிழரின்
உடமைகள் எல்லாம் உருவப்பட்டு
ஆணிவேரும் அறுக்கப்பட்டு
துரத்தப்பட்ட நன்றிகொன்ற தினங்கள் அவை.

கொழும்புத்துறைமுகத்தில் இருந்து
தமிழரை ஏற்றிக்கொண்டு கப்பல்
காங்கேசன்துறை வந்து நின்றபோதே
இலங்கைத்தீவு ஒரு தேசம் என்ற
வார்த்தை பாக்குநீரிணைக்குள் அமிழ்ந்துபோனது காண்.

எரித்தும் அடித்தும் குதறப்பட்ட
தமிழர்களின் சடலங்களின் மீதும்
தென்னிலங்கை அகதிமுகாம்களில்
கட்டியிருந்த ஒற்றை ஆடைகளுடன்
உணவுக்கு வரிசையில் நின்ற
தமிழர்களின் நெஞ்சுக்குள்ளும்

போர் என்றால் போர் என்ற
பேரின சனாதிபதியின் பிரகடனம்தான்
சிங்களத்தின் ஒரே செய்தியாக
அழிக்கமுடியாமல் எழுதப்பட்டது அப்போது.

தென்னிலங்கைத் தெருக்களில் தமிழர்
உயிர்குடித்து வழிந்துஓடிய ஆதிக்கவெறி
வெலிக்கடையின் மதில்கடந்து உள்நுழைந்தும்
உயிர்பறித்தும் கண்அகழ்ந்தும்
புத்தருக்கு படையலிட்டு வெறியாடியது.

அன்றைக்கு புத்தன் நினைத்திருப்பான்
வெறும் சித்தார்த்தனாகவே இருந்திருக்கலாம் என்று
அரசமரத்துக்கு கீழிருந்த நாட்களுக்காக
நிச்சயம் ரத்தக் கண்ணீர் வடித்துமிருப்பான்.

இன்றைக்கு இருபத்திஎட்டு ஆண்டுகள்
ஓடியும் உருண்டும் கடந்தும் போனதுதான்
அந்த நாட்களில் சிங்கள தெருக்களில்
கோடுபோட்ட பியாமா சாரத்துடன்
வெறியாட்டமாடிய தெருக்கோடி சண்டியரும்,

தென்னிலங்கை அலுவலகங்களில்
ஒன்றாய் உண்டுகழித்து வேலை செய்த
ரை கட்டிய சிங்கள லொக்குமாத்தையாக்களும்
ஒரே செய்தியையே தமிழருக்கு சொல்லினர்.

இது உங்கள் தேசமல்ல
இது உங்கள் நாடும் அல்ல
இன்றைக்கும் தொடரும் சிங்களத்தின்
செய்தியும் பிரகடனமும் இதுதான்.

கடந்துபோகும் ஒவ்வொரு கறுப்புயூலையும்
இன்னும் இன்னும் அழுத்தமாக
சொல்லிக் கொண்டு போகிறது
சிறீலங்கா தமிழரின் தேசமல்ல.

தமிழரின் தாயகம் தமிழீழம் என்றே!
இந்த கறுப்புயூலையிலும்
இந்த முடிவே இன்னும் ஆழமாக மனதுக்குள்.!
எங்களுக்கென்றொரு தாயகம் வேண்டும்.!