உயிரை காவு வாங்கும் ‘சீன மாஞ்சா நூல்’ – வடசென்னையில் தீவிர கண்காணிப்பு

75 0

சென்னை பகுதியில் கடந்த காலங்களில் அதிகஅளவில் கட்டுப்பாடின்றி அதிக அளவில் காற்றாடி பறக்கவிடப்பட்டு வந்தது. வடசென்னை பகுதியில் காற்றாடி பறக்கவிடும் போட்டிகளும் நடைபெற்றன.

இதில் சிலர் மாஞ்சா நூலை பயன்படுத்தியதால் அவை அறுந்து காற்றில் பறந்து செல்லும் போது இருசக்கர வாகனத்தில் செல்பவர்களின் கழுத்தில் சுற்றி அறுத்த சம்பவம் அதிக அளவில் நடந்து வந்தன. இதில் உயிர்பலியும் ஏற்பட்டு உள்ளது. ஏராளமானோர் மாஞ்சா நூலில் சிக்கி பலத்த காயம் அடைந்து உயிர்தப்பிய சம்பவமும் நடந்து உள்ளது. இந்த மாஞ்சா நூலுக்கு பறவைகளும், விலங்குகளும் கூட தப்பவில்லை.இதைத்தொடர்ந்து கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு சென்னை போலீசார் மாஞ்சா நூல் விற்பனை, பயன்பாட்டுக்கு தடை விதித்தனர்.

எனினும்ஆன்லைன் மூலம் மாஞ்சா நூலை வாங்கி காற்றாடி பறக்கவிட்டனர். இதைத் தொடர்ந்து ஆன்லைன் விற்பனையிலும் மாஞ்சாநூலுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. குறிப்பாக வண்ணார ப்பேட்டை, எம்.சி.ரோடு, ஜி.ஏ.ரோடு, ராயபுரம் பகுதி ஆட்டுத்தொட்டி, புது வண்ணாரப்பேட்டை பகுதி கிராஸ் ரோடு, கொருக்குப் பேட்டை போன்ற பகுதிகளில் மாஞ்சா நூல் விற்பனை அமோகமாக இருந்து வந்தது. இந்த இடங்களை போலீசார் தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள்.

பல்வேறு வகை மாஞ்சா நூல்கள் உள்ளதில் சீன மாஞ்சா நூல் மிகவும் ஆபத்தானதாக உள்ளது. இந்த நூல் கண்ணுக்கு தெரியாது என்பதாலும், ஒருவரின் உடலை கிழித்து உயிரை பறிக்கும் திறன் கொண்டது என்பதாலும் இந்த வகை மாஞ்சா நூலை மக்கள் பயன்படுத்தக்கூடாது என அறிவுரைகள் வழங்கப்பட்டு உள்ளன.

இருப்பினும் சிலர் தடையை மீறி அதனை பயன்படுத்தி வருகின்றனர்.பலரது உயிரை குடித்து உள்ள இந்த சீன மாஞ்சா நூலுக்கு குஜராத், டெல்லி, மராட்டியம், அரியானா, பஞ்சாப், தெலுங்கானா, சண்டிகார், திரிபுரா உள்ளிட்ட மாநிலங்களில் நிரந்தர தடை உள்ளது குறிப்பிடத்தக்கது. தற்போது பொங்கல் பண்டிகை நெருங்குவதால் காற்றாடி விடும் போட்டிக்காக வடசென்னை பகுதியில் மாஞ்சா நூல் கடை மற்றும் ஆன்லைனில் விற்பனை செய்யப்படுகிறதா என்று உளவுத்துறையும், போலீசாரும் தனிப்படை அமைத்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். சென்னையிலும் இதற்கு முன்பு ஆன்லைனில் வாங்கி சீனா மாஞ்சா நூல் விற்பனை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து ஏற்கனவே மாஞ்சா நூல் விற்பனையில் ஈடுபட்டவர்கள் குறித்த விபரங்களை சேகரித்து தொடர்ந்து கண்காணித்து வருவதாக போலீசார் தெரிவித்து உள்ளனர்.

காயம் அடைந்த பறவைகள் குறித்து அவசர தேவைக்கு விலங்குகள் நல அமைப்பான பீட்டாவை 98201 22602 என்ற உதவி எண்ணில் தகவல் தெரிவிக்கலாம்.இதற்கிடையே கடந்த அக்டோபர் 30-ந் தேதி மாஞ்சா நூலினை தயாரிக்கவும், விற்பனை செய்யவும், கொள்முதல் ஏற்றுமதி செய்யவும் தமிழக அரசு தடை விதித்துள்ளது.இந்தத் தடை உத்தரவை மீறுப வர்கள் மீது சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு அபராதம் விதிக்கப்படும் என்று தமிழக அரசா ணையில் வெளியி டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.