போக்குவரத்து தொழிற்சங்கங்களுடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தி, அவர்களது கோரிக்கைகளை நிறை வேற்ற வேண்டும் என அரசியல் தலைவர்கள் வலியுறுத்தி உள்ளனர். இதுதொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது:
அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி: சட்டப்பேரவைத் தேர்தலின்போது, போக்குவரத்துத் தொழிலாளர் களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டம் உள்ளிட்ட பல வாக்குறுதிகளை அளித்த நிலையில் எந்த வாக்குறுதியையும் திமுக அரசு நிறைவேற்றவில்லை. லட்சக்கணக்கான மக்கள் அவர்களுடைய சொந்த ஊர்களுக்குச் சென்று பொங்கல் பண்டிகையை கொண்டாட வேண்டும் என்பதைக் கருத்தில் கொண்டு, போக்குவரத்துத் தொழிற்சங்கங்களுடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களுடைய கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும்.
அமமுக பொதுச் செயலாளர் டிடிவிதினகரன்: பொங்கல் பண்டிகைக்கு ஏராளமான பொதுமக்கள் தங்களின் சொந்த ஊர்களுக்கு பயணம் மேற் கொள்ள திட்டமிட்டிருக்கும் நிலையில், போக்குவரத்து ஊழியர்களின் வேலைநிறுத்தத்தை சாதகமாகப் பயன்படுத்தி தனியார் பேருந்துகள் இப்போதே கட்டணத்தை பன்மடங்கு உயர்த்த தொடங்கிவிட்டதாக புகார் எழுந்துள்ளது. எனவே, போக்குவரத்து தொழிற்சங்கங்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றி, வேலைநிறுத்தப் போராட்டத்தை தமிழக அரசு முடிவுக்கு கொண்டு வரவேண்டும்.
ஐஜேகே பொதுச் செயலாளர் பி.ஜெயசீலன்: கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் திறப்பு, பொங்கல் பண்டிகை என பொதுமக்கள் திசை தெரியாமல் திணறும்போது, இந்த வேலைநிறுத்தம் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். தொழிற்சங்கங்களும், தமிழக அரசும் இணைந்து வேலை நிறுத்தத்தை உடனே முடிவுக்கு கொண்டுவர வேண்டும்.
பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன்: பொங்கல் பண்டிகையை அனைத்து மக்களும் தங்கள் குடும்பத்தினருடனும் மகிழ்ச்சியுடனும் கொண்டாடி மகிழ போக்குவரத்துக் கழக தொழிலாளர் களின் போராட்டத்தை அரசு முடிவுக்கு கொண்டு வரவேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.