அமைச்சர்கள் மற்றும் முன்னாள் அமைச்சர்களுக்கு எதிரான சொத்து குவிப்பு வழக்குகளில் கீழமை நீதிமன்றங்கள் பிறப்பித்த தீர்ப்பை மறுஆய்வு செய்யும் வகையில் உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து எடுத்த வழக்குகளின் இறுதி விசாரணை பிப்.5 முதல் பிப்.9 வரை தினந்தோறும் நடைபெறும் என நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் அறிவித்துள்ளார்.
தமிழக அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, ஐ.பெரியசாமி, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் பொன்முடி, வளர்மதி ஆகியோருக்கு எதிரான சொத்து குவிப்பு வழக்குகள் மற்றும் முறைகேடு வழக்குகளில் கீழமை நீதிமன்றம் அவர்களையும் அவர்களது குடும்பத்தினரையும் மற்றவர்களையும் விடுவித்து உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவை மறுஆய்வு செய்யும் வகையில் உயர் நீதிமன்ற நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து வழக்காக எடுத்து விசாரித்து வருகிறார்.
இந்நிலையில் இந்த வழக்குகள் நீதிபதி என்.ஆனந்த் வெங்டேஷ் முன்பாக நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது இதில் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, சாத்தூர் ராமச்சந்திரன் மற்றும் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், முன்னாள் அமைச்சர் பா.வளர்மதி ஆகியோருக்கு எதிரான வழக்குகளில் வரும் பிப்.5 முதல் பிப்.9 வரை தினந்தோறும் மாலை 3 மணிக்கு மேல் இறுதி விசாரணை நடைபெறும்.
அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு எதிரான வழக்கு விசாரணை பிப்.12 மற்றும் பிப்.13 தேதிகளில் நடைபெறும். மேலும், முன்னாள் அமைச்சர் பொன்முடி மற்றும் அவருடைய மனைவி விசாலாட்சி ஆகியோருக்கு எதிரான சொத்து குவிப்பு வழக்கு விசாரணை பிப்.19 முதல் பிப்.22 வரை நடைபெறும். இந்த வழக்கு விசாரணைக்கு அனைத்து தரப்பும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றார்.
அதேபோல முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு எதிரான வழக்கை விழுப்புரம் நீதிமன்றத்தில் இருந்து வேலூர் நீதிமன்றத்துக்கு மாற்ற வேண்டுமென உயர் நீதிமன்றத்துக்கு ஏதேனும் கோரிக்கை விடுக்கப்பட்டதா என்பது குறித்து பொன்முடி தரப்பிலும், லஞ்சஒழிப்புத் துறை போலீஸார் தரப்பிலும் விளக்கமளிக்க வேண்டுமெனவும் உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்தார்.
அதேபோல இந்த வழக்கில் தீர்ப்பளித்த ஓய்வுபெற்ற நீதிபதி வசந்தலீலா நேரிலோ அல்லது தனது வழக்கறிஞர் மூலமாகவோ விளக்கமளிக்கலாம் என்றும் நீதிபதி என்.ஆனந்த வெங்கடேஷ் உத்தரவிட்டுள்ளார்.
ஏற்கெனவே உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த மற்றொரு சொத்து குவிப்பு வழக்கின் மேல்முறையீட்டு வழக்கில், தமிழக உயர்கல்வித் துறை அமைச்சராக பதவி வகித்த பொன்முடிக்கும், அவரது மனைவிக்கும் உயர் நீதிமன்ற நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்ததால் அவர் அமைச்சர் பதவியை இழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.