சட்டமூலத்தை நிறைவேற்ற முன்னர் கலந்துரையாடலுக்கு கால அவகாசம் தேவை

80 0
அரசாங்கம் இவ்வாரம் பாராளுமன்றத்தில் விவாதத்துக்கு எடுத்து நிறைவேற்ற உத்தேசித்திருக்கும் தேசிய ஐக்கியம் மற்றும் நல்லிணக்க அலுவலக சட்டமூலம் தொடர்பாக பொதுவெளியில் கலந்துரையாடுவதற்கோ அல்லது அதன் தேவை குறித்து மக்களுக்கு அறிவூட்டுவதற்கோ எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று விசனம் தெரிவித்திருக்கும் பல்வேறு சிவில் சமூக அமைப்புக்கள் அவற்றின் மூன்று முக்கிய அக்கறைகளை வெளிக்காட்டி அறிக்கை யொன்றை விடுத்திருக்கின்றன.

அந்த அறிக்கையில் அகில இலங்கை வை.எம்.எம்.ஏ.மகாநாட்டின் தலைவர் இஷான் ஏ.ஹமீத், அநுராதபுர மாவட்ட குடிமக்கள் கமிட்டியின் ஒருங்கிணைப்பாளர் நிமால் திசாநாயக்க, ஏசியா லங்கா சமூக அபிவிருத்தி கூட்டுத்தாபன தலைலர் சஷித்த ஹேவகே, போரில் பாதிக்கப்பட்ட பெண்கள் அமைப்பின் தலைவி விசாகா தர்மதாச, சமூகப் பயிற்சிக்கான நிலையத்தின் பணிப்பாளர் டாக்டர் ஜோ வில்லியம், மார்கா நிறுவன நிறைவேற்று உப லைவர் அமார் குணதிலக்க, கிழக்கு சமூக அபிவிருத்தி பவுண்டேசன் தலைவர் முஹமட் புஹாரி,சட்ட,சமூக நம்பிக்கை நிதியத்தின் நிறைவேற்று பணிப்பாளர்  சகுந்தலா கதிர்காமர், தேசிய சமாதானப் பேரவையின் நிறைவேற்று பணிப்பாளர் கலாநிதி ஜெகான் பெரேரா உட்பட  19 சிவில் சமூக அமைப்புக்களின் தலைவர்கள் கைச்சாத் திட்டிருக்கிறார்கள்.

அறிக்கையின் முழு விபரம் வருமாறு;

அரசாங்கம் இந்த வாரம்   தேசிய ஐக்கியம் மற்றும் நல்லிணக்க அலுவலக சட்ட மூலத்தை பாராளுமன்றத்தில் விவாதத்துக்கு எடுத்து சட்டமாக்கவிருக்கிறது.

பொருளாதார, சமூக, கலாசார மற்றும் அரசியல் பரப்பில் சகல குடிமக்களுக்கும் சமத்துவமான வாய்ப்புக்களை உறுதிசெய்யுமுகமாக தேசிய ஐக்கியம், நல்லிணக்க அலுவலகம் ஒன்றை நிறுவுவதே இந்த சட்டமூலத்தின் நோக்கமாகும்.

அதேவேளை அடையாளத்தைப் பேணிப் பாதுகாப்பதையும் பல்வகைமையை மதிக்கின்றதும்  அமைதியுடனும் ஐக்கியத்துடனும் சகல சமூகங்களும் சகவாழ்வு வாழக்கூடியதுமான சகலரையும் அரவணைக்கும்  சமுதாயம் ஒன்றைக் கட்டியெழுப்புவதையும் இந்த அலுவலகம் நோக்கமாகக் கொண்டிருக்கும்.

தேசிய ஐக்கியம் மற்றும் சமாதான சகவாழ்வை மேம்படுத்துதல், இலங்கையில் உள்ள சிவில் மற்றும் அரசியல் சமூகங்கள் மத்தியில் உள்ள பல்வகைப்பட்ட பிரதிநிதிகள் மத்தியில் பேச்சுவார்த்தைகளை ஊக்குவித்தல் போன்ற மெச்சத்தக்க இலக்குகள் சட்டமூலத்தில் விபரிக்கப்பட்டுள்ளன.

ஆனால், துரதிர்ஷ்டவசமாக புதிய அலுவலகத்தின் முக்கியத்துவத்தை அரசாங்கமும் அதன் கொள்கை வகுப்பாளர்களும் சட்டவரைஞர்களும் குறைத்து மதிப்பிடுவதாக தெரிகிறது. ஏனென்றால் சட்டமூலம் குறித்து பொதுக் கலந்துரையாடலை நடத்துவதற்கோ அல்லது அலுவலகத்தின் தேவை குறித்து பொதுமக்களுக்கு அறிவூட்டுவதற்கோ எந்த உருப்படியான முயற்சியும் எடுக்கப்படவில்லை.

இது தொடர்பில் மூன்று முக்கிய  அக்கறைகள் எமக்கு இருக்கின்றன.

முதலாவதாக, தேசிய ஐக்கியம், நல்லிணக்க அலுவலகத்தின் தீர்மானங்களை எடுக்கும் சபையின் உறுப்பினர்களின் ஒழுங்கமைவு (Composition) அதன் பணிகள் வெற்றிகரமானவையாக அமைவதற்கு முக்கியமானது என்று நாம் நம்புகிறோம். அலுவலகம் எந்த அமைச்சரின் மேற்பார்வையின் கீழ் வருகிறதோ அவரே அந்த சபையின் உறுப்பினர்களை நியமிப்பார்.

மூன்று வருட பதவிக் காலத்தைக் கொண்ட 11 உறுப்பினர்களை நியமிப்பதற்கு சிபாரிசை செய்வதற்கு அமைச்சருக்கு அதிகாரம் இருக்கின்ற அதேவேளை தலைவருக்கு பதவிக்கால மட்டுப்பாடு இல்லை.

இது சரியான ஒரு ஏற்பாடு இல்லை. இன,மத குழுக்களினதும் சமூக – கலாசார நலன்களினதும் பல்வகைமையை பிரதிநிதித்துவப்படுத்தக்கூடியதாக  சபையின் உறுப்பினர்கள் நியமிக்கப்படுவதை உறுதிசெய்யும் வகையில் பெருமளவுக்கு பல்தரப்பு வழிமுறையொன்று கடைப்பிடிக்கப்படவேண்டும் என்று நாம் வலியுறுத்துகிறோம்.

இரண்டாவதாக, சுயாதீனமான நல்லிணக்கப் பொறிமுறைகள் சகலதையும் ஒன்றாகக் கொண்டுவரும் தேசிய நல்லிணக்கச் செயன்முறையில் முதன்மையான பாத்திரமொன்றை மேற்படி அலுவலகம் வகிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால் அதன் சபைக்கு நியமிக்கப்படும் உறுப்பினர்கள் மத்தியில்  காணாமல்போனோர் விவகார அலுவலகம், இழப்பீட்டு அலுவலகம், அரசாங்க சார்பற்ற தன்னார்வ நிறுவனங்கள் அலுவலகம் மற்றும் விரைவில் நியமிக்கப்படவிருக்கும் உண்மை,ஐக்கியம், நல்லிணக்க ஆணைக்குழு ஆகியவற்றைச் சேர்ந்தவர்கள் பதவிவழி உறுப்பினர்களாக நியமிக்கப்படவேண்டும் என்று  என்று கோருகிறோம்.

அவ்வாறு செய்வதன் மூலமாக சகல நல்லிணக்க நிறுவனங்களும் பொதுவான ஒரு நோக்கை பகிர்ந்துகொள்வதையும் அவை ஒவ்வொன்றும் செய்கின்ற பணிகளை பரஸ்பரம் அறிவித்துக் கொள்வதையும் உறுதிசெய்துகொள்ளக்கூடியதாக இருக்கும்.

பாதிக்கப்பட்ட நபர்களினதும் சமூகங்களினதும் கருத்துக்கள் பரிசீலிக்கப்ட்டு நடவடிக்கைகள் எடுக்கப்படுவதற்காக  சிவில் சமூகத்தின் பிரதிநிதித்துவத்தை உறுதிசெய்யவேண்டிய தேவையும் இருக்கிறது.

மூன்றாவதாக, சமூக அடிப்படையிலான  அமைப்புக்கள் உட்பட உள்நாட்டு அமைப்புக்களினால் முன்னெடுக்கப்படும் சமாதான மற்றும் நல்லிணக்க செயற்திட்டங்களுக்கு வழிகாட்டி அனுசரணையாக செயற்படுவதற்கு அந்த அலுவலகத்துக்கு அதிகாரம் இருப்பதால் சிவில் சமூகத்துடனான விவகாரங்களைப் பொறுத்தவரை அதற்கு வழங்கப்படும் பாத்திரம் விதிமுறைக்கு உட்பட்டதாக (Prescriptive ) இருக்கவேண்டும் என்று நாம் அக்கறை கொண்டுள்ளோம்.

சிவில் சமூகத்தின் பணிகளை கண்காணிப்பதற்கும் மீளாய்வுசெய்வதற்கும் அலுவலகத்திற்கு இருக்கும் அதிகாரம் தேசிய நல்லிணக்க கொள்கைகளும் செயற்பாடுகளும் குறுகிய மற்றும் பக்கச்சார்பான நோக்கங்களுக்காக அரசியல்மயப்படுத்தப்படக்கூடிய சாத்தியம் இருப்பதால் அரசாங்கம் அடாவடித்தனமாக நடந்ததுகொள்ளக்கூடும் என்று நாம் விசனமடைகிறோம்.

அரசாங்கம் அதன் வழிகாட்டல்களை சிவில் சமூகம் பின்பற்றவேண்டும் என்று  அறிவுறுத்தாமல் உதவியாகவும் அனுசரணையாகவும் செயற்படக்கூடியதாக புதிய சட்டத்தில் தெளிவுபடுத்தப்படவேண்டியதும் அவசியமாகும்.

தேசிய நல்லிணக்கத்தை உயர்மட்டத்தில் இருந்து கீழ் நோக்கி திணிக்கமுடியாது. சகல இன,மத சமூகங்களையும் ஈடுபடுத்தும் சுயவிருப்பிலான ஒரு செயன்முறையாக இருக்கவேண்டியது அவசியம்.

புதிய அலுவலகம் தொடர்பிலான கலந்தாலோசனைகளில் சிவில் சமூகப் பிரதிநிதிகளையும் மக்களால் தெரிவுசெய்யப்பட்ட அரசியல் பிரதிநிதிகளையும் ஈடுபடுத்தவேண்டிய தேவையும் இருக்கிறது.

புதிய சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் நிறைவேற்றுவதற்கு முன்னதாக எதிரணி அரசியல் கட்சிகளுடன் குறிப்பாக இன,மத சிறுபான்மை சமூகங்களைப் பிரதிநிதித்துவம் செய்யும் கட்சிகளுடனும் சிவில் சமூகத்துடனும் அரசாங்கம் விரிவான பேச்சுவார்த்தைகளை நடத்த வேண்டும்.

தேசிய ஐக்கியம் மற்றும் நல்லிணக்க அலுவலகத்தை அமைக்கும் செயன்முறையை தேசிய ஐக்கியத்துக்கான உண்மையான ஒரு நல்லிணக்கப் பாதையாக்குவதற்கு பன்முகப் பண்புகளயைும் அரவணைக்கும் பல்தரப்பு கருத்தொருமிப்பைக் காண்பதற்கு அத்தகைய பேச்சுவார்த்தைகள் அவசியமாகும்.