இஸ்ரேலுக்கு எதிராக சர்வதேச நீதிமன்றத்தை நாடிய தென்னாபிரிக்காவுக்கு இலங்கையில் பலரும் ஆதரவு

60 0

இஸ்ரேலுக்கு எதிராக சர்வதேச நீதிமன்றத்தில் வழக்குத்தாக்கல் செய்திருக்கும் தென்னாபிரிக்காவுக்கு ஆதரவையும், நன்றியையும் வெளிப்படுத்தும் வகையில் கொழும்பிலுள்ள தென்னாபிரிக்க உயர்ஸ்தானிகரகம் முன்பாக நடைபெற்ற உடன்நிற்பு போராட்டத்தில் பலர் கலந்துகொண்டதுடன், அவர்கள் இலங்கையில் இடம்பெற்ற மீறல்களால் பாதிக்கப்பட்டோருக்கான நீதியை நிலைநாட்டுவதற்கு தென்னாபிரிக்கா ஒத்துழைப்பு வழங்கவேண்டும் என வலியுறுத்தினர்.

காஸாவில் பதிவாகியிருக்கும் உயிரிழப்புக்களும், சேதங்களும், மனிதாபிமான நெருக்கடியும் 1948 ஆம் ஆண்டு இனப்படுகொலை தொடர்பான பிரகடனத்தின் அளவீடுகளை எட்டியிருப்பதாகக் குறிப்பிட்டு தென்னாபிரிக்கா கடந்த வெள்ளிக்கிழமை இஸ்ரேலுக்கு எதிராக சர்வதேச நீதிமன்றத்தில் வழக்குத்தாக்கல் செய்துள்ளது.

இந்நிலையில் காஸா மீதான இஸ்ரேலின் தாக்குதல்களுக்கு எதிராக தென்னாபிரிக்க அரசாங்கம் முன்னெடுத்திருக்கும் நடவடிக்கைக்கு தமது உடன்நிற்பையும், நன்றியையும் வெளிப்படுத்தும் வகையில் இலங்கையில் இயங்கிவரும் பலஸ்தீன விடுதலை இயக்கம் திங்கட்கிழமை (8) மாலை 4.00 மணியளவில் கொழும்பு, ரோஸ்மீன்ட் இடத்திலுள்ள தென்னாபிரிக்க உயர்ஸ்தானிகரகம் முன்பாக ஒருமைப்பாட்டு போராட்டமொன்றை ஏற்பாடு செய்திருந்தது.

இதில் இலங்கைக்கான பலஸ்தீன தூதுவர் சுஹைர் ஹம்தல்லா செயிட், அருட்தந்தை லயனல், சிவில் சமூக செயற்பாட்டாளர்களான ஷ்ரீன் ஸரூர், ரஸியா, ரூகி பெர்னாண்டோ, ஹனா இப்ரஹீம், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பைஸர் முஸ்தபா உள்ளடங்கலாக பலர் கலந்துகொண்டிருந்தனர்.

அவர்கள் ‘அநீதி இடம்பெறும் அனைத்து இடங்களிலும் நீதி சவாலுக்கு உட்படுத்தப்படுகின்றது’, ‘இஸ்ரேலுக்கு எதிராக வழக்குத்தாக்கல் செய்துள்ள தென்னாபிரிக்காவை ஆதரிக்கின்றோம்’, ‘உடனடி போர்நிறுத்தம் அவசியம்’ போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியிருந்ததுடன், ‘பலஸ்தீனத்தை விடுவியுங்கள்’, ‘இனியும் ஆக்கிரமிப்பு வேண்டாம்’, ‘பலஸ்தீனம் விடுதலை பெறும்’, ‘சிறுவர்களைக் கொல்லவேண்டாம்’ போன்ற கோஷங்களையும் எழுப்பினர்.

இதனிடையே தென்னாபிரிக்க உயர்ஸ்தானிகரக அதிகாரிகள் நுழைவாயிலுக்கு வெளியே வந்து ஒருமைப்பாட்டை வெளிப்படுத்திய ஆதரவாளர்களைச் சந்தித்து நன்றி தெரிவித்தனர். பதிலுக்கு தமது நன்றியையும், உடன்நிற்பையும் வெளிப்படுத்திய ஆதரவாளர்கள், இந்நடவடிக்கையின் மூலம் தென்னாபிரிக்க அரசாங்கம் ஒட்டுமொத்த உலகுக்கும் அரசியல் நேர்மை குறித்த தெளிவான செய்தியை எடுத்துரைத்திருப்பதாக சுட்டிக்காட்டினர்.

அதேவேளை இதுபற்றிக் கருத்து வெளியிட்ட அருட்தந்தை லயனல், இஸ்ரேல் – பலஸ்தீன மோதல் விவகாரத்தில் உலகின் வேறு எந்தவொரு நாடும் செய்யமுன்வராததை தென்னாபிரிக்கா செய்திருப்பதாகவும், அதனைத் தாம் நன்றியுடன் பாராட்டுவதாகவும் தெரிவித்தார்.

‘நாம் தென்னாபிரிக்காவிடமிருந்து பல பாடங்களைக் கற்றுக்கொள்ளவேண்டும். தற்போதைய சூழ்நிலையில் இலங்கை அரசாங்கம் செயற்படும் விதம் குறித்து மிகவும் வெட்கமடைகின்றேன். இஸ்ரேலுக்கு பணியாளர்களை அனுப்புவதற்கும், செங்கடலுக்குப் பாதுகாப்புப்படையை அனுப்புவதற்கும் இலங்கை நடவடிக்கை எடுத்திருக்கின்றது. இது எவ்வகையிலும் ஏற்புடையதல்ல. அதேபோன்று கடந்த காலங்களில் எமது நாட்டின் தமிழ், முஸ்லிம், கிறிஸ்தவ சிறுபான்மையினத்தவருக்கு எதிராக இழைக்கப்பட்ட அநீதிகளை எடுத்துநோக்குமிடத்து, எமது நாடும் சர்வதேச நீதிமன்றத்துக்குக் கொண்டுசெல்லப்படவேண்டும்’ என அவர் வலியுறுத்தினார்.

அவரைத்தொடர்ந்து கருத்துரைத்த சிவில் சமூக செயற்பாட்டாளரான ஷ்ரீன் ஸரூர், காஸாவில் நிகழ்த்தப்படும் இனப்படுகொலைக்கு எதிராக ஹேக்கை (நெதர்லாந்தின் ஹேக் நகரிலேயே சர்வதேச நீதிமன்றம் அமைந்துள்ளது) நாடியதன் மூலம் மிகவும் வலுவான முதலாவது எதிர்ப்பை தென்னாபிரிக்கா வெளிப்படுத்தியிருப்பதாகவும், இது மிகத்துணிச்சலான நடவடிக்கை எனவும் சுட்டிக்காட்டினார்.

அதேபோன்று அண்மையில் இலங்கை அரசாங்கத்தினால் வர்த்தமானியில் வெளியிடப்பட்டிருக்கும் உண்மை, ஒற்றுமை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தில் ‘மன்னிப்பு’ என்ற விடயம் உள்ளடக்கப்பட்டிருப்பதாகக் குறிப்பிட்ட ஷ்ரீன் ஸரூர், இலங்கையில் இடம்பெற்ற அநீதிகளால் பாதிக்கப்பட்டோருக்கான நீதியை நிலைநாட்டுவதற்கு தென்னாபிரிக்கா ஒத்துழைப்பு வழங்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.