இது VAT வரியல்ல, ஊழல்வாதிகளைப் பாதுகாக்கும் வரி

69 0

தற்போது விதிக்கப்பட்டுள்ள VAT வரி உண்மையில் VAT அல்ல என்றும்,மாறாக ஊழல்வாதிகளைப் பாதுகாக்கும் வரி என்றும், ஊழல் மிக்க ஆட்சியாளர்கள் ஒவ்வொரு துறையிலும் திருடிய பிறகு நாடு வங்குரோத்தானது என்றும், இந்த வங்குரோத்து நிலையில், ஊழல்வாதிகளிடம் இருந்து பணத்தை மீட்பதற்கு பதிலாக, ஊழல் வாதிகளை பாதுகாத்துக் கொண்டு, நாடு இழந்த பணத்தை மக்களை ஒடுக்கி பெறப்பட்டு வருவதாகவும், எனவே இந்த வற் வரியை ஊழல் நிறைந்த வரி என்று அழைக்கலாம் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

பிரபஞ்சம் தகவல் தொழிநுட்ப நிகழ்ச்சித் திட்டத்தின் 62 ஆவது கட்டமாக  மினுவாங்கொட நெதகமுவ கனிஷ்ட வித்தியாலயத்திற்கு 10 இலட்சம் ரூபா பெறுமதியான ஸ்மார்ட் வகுப்பறை உபகரணங்களை வழங்கும் நிகழ்வில் இன்று (06) கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

ஜனாதிபதி மொட்டுவின் கைப்பாவை,

தற்போதைய ஜனாதிபதி ஊழல்வாதிகளின் வாக்குகளால் தேர்ந்தெடுக்கப்பட்டதால் ஊழல்வாதிகளை பாதுகாத்து வருகிறார் என்றும்,இதன் காரணமாக மொட்டுவின் 134 பேரும் கூறுவதற்கு ஏற்ப கைப்பாவை போன்று ஆட நேரிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

ஜனாதிபதிக்கு யார் தான் ஆலோசனை வழங்குகிறார்களோ,

செங்கடலில் ஹூதி கிளர்ச்சியாளர்களின் நடவடிக்கைகளால் நமது நாட்டில் பொருட்களின் விலை அதிகரிப்பதால், 250 மில்லியன் ரூபா செலவிட்டு இலங்கை கடற்படைக் கப்பலை ஈடுபடுத்தி, இந்த ஹூதி கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக போராட தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதி அண்மையில் தெரிவித்தார் என்றும், உலகில் அபிவிருத்தியடைந்த நாடுகள் இருக்கும் போது இந்த வங்குரோத்து நாடு ஏன் இவ்வாறான செயலைச் செய்ய முன்வருகிறது என்பது ஆச்சரியமளிப்பதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

மாணவர்களுக்கு மதிய உணவைக் கொடுக்க முடியாத,பொருட்களின் விலையை குறைக்க முடியாத இந்த அரசாங்கம் ஹூதி கிளர்ச்சியாளர்களை அடக்க 250 மில்லியன் செலவிட்டுள்ளதாகவும்,நாடு வங்குரோத்து நிலையில் இருக்கும் வேளையில் முன்னுரிமை அளிக்க வேண்டிய பல விடயங்கள் இருந்த போதிலும் ஜனாதிபதி வேறு விடயத்தில் கவனம் செலுத்தியுள்ளார் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

சிறப்புரிமைகள், சலுகைகளுக்காக நாம் ஒன்றிணைய மாட்டோம்,

எந்த வித சிறப்புரிமைகளும் சலுகைகளும் வழங்காமலே ஐக்கிய மக்கள் கூட்டணிக்கு பல்வேறு தரப்புகளை ஒன்றிணைத்துக் கொள்வதாகவும்,ஐக்கிய மக்கள் சக்தி இத்தகைய பணத்தையோ அல்லது சலுகையோ வழங்காது என்றும், எந்த நிபந்தனைகளின் பிரகாரமும் இணைத்துக் கொள்ளவில்லை என்றும்,ஐக்கிய மக்கள் சக்தி வசம் உள்ள பணம் கல்வி மற்றும் சுகாதாரத்தை மேம்படுத்தவே பயன்படுத்தப்படும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்.

குடிமக்களின் ஆயுளைக் குறைக்கும் ஆட்சியே இது,

இந்நாட்டுக் குடிமக்களின் ஆயுட்காலம் குறையும் வகையிலே தற்போது நாட்டில் ஆட்சி நடந்து வருவதாகவும், நாட்டின் பெறுமதியை குறைக்கும் அதே வேளையில் ஆயுட்காலத்தையும் குறைக்கும் விதமான நடவடிக்கைகளையே இந்த ஆட்சி எடுத்து வருவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

ஏனைய தலைவர்களைப் போன்று மக்களுக்கு சேவையாற்ற தான் அதிகாரத்தை கேட்கவில்லை எனவும்,தான் அதிகாரத்தைப் பெறுவதற்கு முன்னரே,கமிஸன் வாங்காமல் நாட்டின் சுகாதாரம் மற்றும் கல்விக்காக பாரிய பணிகளை மேற்கொண்டதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

நாட்டின் சட்டம் சரியாக நடைமுறைப்படுத்தப்பட்டால், நாட்டின் வர்த்தகர்களிடம் பணம் பறிக்கும் கப்பம் கோரும் நபர்களைக் கைது செய்து,இந்த தொழிலதிபர்களை பாதுகாத்து,அவர்களின் ஒத்துழைப்புடன் பாடசாலை வித்துறையை மேம்படுத்த முடியும் என்றும்,இவ்வாறானதொரு சம்பவம் நாட்டில் நடப்பதாக இல்லை என்றும், வர்த்தகர்களைப் பாதுகாப்பதற்கும் அவர்களின் ஆதரவுடன் பாடசாலை அபிவிருத்தித் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கும் ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் இவ்வாறான சட்ட ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்.