சீன மாகாணத்தில் நீண்ட தாடி வளர்க்க தடை

256 0

சீன மாகாணத்தில் உய்குர் இனத்தை சேர்ந்த ஆண்கள் நீண்ட தாடி வளர்க்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதே போன்று பொது இடங்களில் பெண்கள் முகத்தில் திரை அணிந்து வரவும் தடை போடப்பட்டுள்ளது.

சீனாவில் உள்ள ஜின்ஜியாங் மாகாணத்தில் மத அடிப்படையிலான பயங்கரவாதிகள் ஆதிக்கம் செலுத்தி வருகிறார்கள். இந்த நிலையில், அங்கு மத அடிப்படையிலான பயங்கரவாதத்தை ஒடுக்க சீன அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்காக அந்த மாகாணத்தில் புதிய சட்டங்கள் அமல்படுத்தப்பட்டுள்ளன.

அவற்றின்படி, அங்கு உய்குர் இனத்தை சேர்ந்த ஆண்கள் நீண்ட தாடி வளர்க்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதே போன்று பொது இடங்களில் பெண்கள் முகத்தில் திரை அணிந்து வரவும் தடை போடப்பட்டுள்ளது. இந்த தடை உத்தரவுகள் நேற்று முதல் அமல்படுத்தப்பட்டுள்ளன.

அங்கு உய்குர் இன மக்கள், தங்கள் பிள்ளைகளுக்கு வீடுகளில் வைத்து பாடம் கற்றுத்தரவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. கண்டிப்பாக பிள்ளைகளை பள்ளிக்கூடங்களில் சேர்த்துத்தான் படிக்க வைக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும் பயங்கரவாத சிந்தனைகளை பரப்பக்கூடாது, அரசு கல்வியை தடுக்கக்கூடாது, குடும்பக்கட்டுப்பாட்டு கொள்கைகள் அமல்படுத்துவதை கெடுக்கக்கூடாது, பயங்கரவாதத்தை பரப்புகிற கட்டுரைகளை பத்திரிகைகள் வெளியிடக்கூடாது, பயங்கரவாதம் தொடர்பான ஆடியோ, வீடியோ வெளியிடக்கூடாது எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இது தொடர்பான தகவல்களை ஜின்ஜியாங் மாகாண அரசு தனது இணைய தளத்தில் வெளியிட்டுள்ளது.நீளமாக தாடி வளர்ப்பது பயங்கரவாதத்தை ஊக்கவிப்பதாக அமையும் என சீன அரசு கருதுகிறது.