திருவனந்தபுரத்தில் உணவு சாப்பிட்ட 400 போலீசாருக்கு வாந்தி-மயக்கம்

288 0

திருவனந்தபுரத்தில் மீன்குழம்பு உணவு சாப்பிட்ட 400 போலீசாருக்கு வாந்தி-மயக்கம் ஏற்பட்டு அரசு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

திருவனந்தபுரம் பள்ளிபுரத்தில் மத்திய ரிசர்வ் போலீஸ் படை முகாம் உள்ளது. இங்குள்ள முகாமில் ஏராளமான போலீசார் பணியில் உள்ளனர்.

நேற்று இரவு இந்த முகாமில் உள்ள போலீசாருக்கு மீன் குழம்புடன் கூடிய உணவு பரிமாறப்பட்டது. இதை சாப்பிட்ட சிறிது நேரத்தில் போலீசாருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது.

400 பேருக்கு மேல் இந்த பாதிப்பு ஏற்பட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக ஆம்புலன்சுகள் வரவழைக்கப்பட்டு பாதிக்கப்பட்ட போலீசார் திருவனந்தபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

திருவனந்தபுரம் அரசு ஆஸ்பத்திரியில் 200 போலீசாரும், அருகில் உள்ள மற்ற அரசு ஆஸ்பத்திரிகளில் மற்ற போலீசாரும் அனுமதிக்கப்பட்டனர். ஒரே நேரத்தில் ஏராளமான போலீசார் உடல்நிலை பாதிக்கப்பட்டு அரசு ஆஸ்பத்திரிகளுக்கு வந்ததால் அவர்களுக்கு அங்கு பணியில் இருந்த டாக்டர்களால் சிகிச்சை அளிக்கமுடியாத நிலை ஏற்பட்டது.

இதை தொடர்ந்து விடுமுறையில் இருந்த மற்றும் பணி முடிந்து சென்ற டாக்டர்கள் அவசரமாக அரசு ஆஸ்பத்திரிக்கு வர வழைக்கப்பட்டு சிகிச்சைக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்த தகவல் கிடைத்ததும் கேரள சுகாதாரதுறை மந்திரி சைலஜா மற்றும் அதிகாரிகள் திருவனந்தபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு விரைந்தனர். அவர்கள் பாதிக்கப்பட்டவர்களிடம் நலம் விசாரித்தனர். டாக்டர்களிடம் சிகிச்சை பற்றிய விவரங்களையும் கேட்டறிந்தனர்.

போலீசாருக்கு வழங்கப்பட்ட உணவில் இருந்த மீன் வி‌ஷமாக மாறியதால் போலீசாருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டு இருக்கலாம் என்று டாக்டர்கள் கூறினார்கள். மேலும் அவர்கள் சாப்பிட்ட உணவின் மாதிரி சேகரிக்கப்பட்டு ஆய்வு கூடத்திற்கு பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இதுபற்றி மந்திரி சைலஜா கூறும்போது ஒரே நேரத்தில் 400-க்கும் மேற்பட்ட போலீசாருக்கு பாதிப்பு ஏற்பட்டதால் கூடுதல் டாக்டர்கள் மூலம் அவர்களுக்கு உடனடியாக சிகிச்சை அளிக்கப்பட்டது. மேலும் மீன் உணவு வி‌ஷமாக மாறியதற்கான காரணத்தை கண்டறிய விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது என்றார்.