கொலம்பியா நாட்டில் ஏற்பட்டுள்ள வெள்ளம் மற்றும் மண்சரிவில் சிக்கி 93 பேர் பரிதாபமாக பலியாகியுள்ளனர். மேலும், பலர் காணாமல் போயுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தென் அமெரிக்கா நாடான கொலம்பியாவில் உள்ள புட்டுமயோ மாகாணத்தில் பல மணி நேரமாக கனமழை பெய்து வருகிறது. கனமழை காரணமாக அப்பகுதியில் உள்ள நதிகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.
இதனால், நதிகளின் கரையோரம் உள்ள பொதுமக்களின் வீடுகளில் கடும் நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் சிக்கி சுமார் 93 பொதுமக்கள் இதுவரை உயிரிழந்துள்ளதாக முதல் கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் பலர் காயம் அடைந்துள்ளனர். பலரை காணவில்லை. மேலும், பல பேர் மண் சரிவில் சிக்கி புதையுண்டு போயுள்ளதாகவும், அவர்களை மீட்கும் பணியில் ராணுவத்தினர் ஈடுபட்டுள்ளதாகவும் அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. சம்பவ இடத்தில் தொடந்து மீட்பு பணிகள் நடந்து வருகின்றன. மீட்புப் பணிகளை பார்வையிட்ட அந்நாட்டு பிரதமர் ஜூவன் மானுவல் சாண்டோஸ், பேரிடர் நிவாரணப் பணிகள் தீவிரமாக நடந்து வருவதாகவும், பாதிக்கப்பட்ட மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு அப்புறப்படுத்தப் பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.