நாட்டில் சமாதானத்தையும் நல்லிணக்கத்தையும் ஏற்படுத்த கலைஞர்களால் முடியும் – ஜனாதிபதி

240 0

நாட்டில் சமாதானத்தையும் நல்லிணக்கத்தையும் ஏற்படுத்தும் செயன்முறையில் கலைஞர்கள் விசேட பங்களிப்பினை வழங்க முடியுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

‘ஜனாதிபதி சினிமா விருது விழா 2017’ எட்டு வருடங்களின் பின்னர் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போது ஜனாதிபதி இதனை தெரிவித்தார்.

சினிமாத்துறையின் எதிர்கால முன்னேற்றத்திற்காகவும் பல கலைஞர்கள் தமது வாழ்வின் பிற்பகுதியில் அனுபவிக்கும் துயரமான நிலைமைக்கு தீர்வு காண்பதற்காகவும் தயாரிக்கப்பட்ட செயற்திட்டங்களை இவ்வருட நடுப்பகுதியிலிருந்து செயற்படுத்த முடியுமென தான் எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி இதன்போது குறிப்பிட்டார்.

இலங்கை தேசிய திரைப்படக் கூட்டுத்தாபனத்தினால் 1979 ஆம் ஆண்டில் ஜனாதிபதி சினிமா விருது விழா அறிமுகப்படுத்தப்பட்டது.

இலங்கை சினிமாத்துறையானது 70 வருடங்களைப் பூர்த்தி செய்துள்ளது.

இந்த நிலையில் கடந்த 2015 ஆம் ஆண்டில் திரையிடப்பட்ட திரைப்படங்களுக்காக இதன்போது விருதுகள் வழங்கப்பட்டன.

சினிமாத்துறையின் வளர்ச்சி மற்றும் கலைஞர்களை ஊக்கப்படுத்தும் நோக்கத்தோடு நடைபெற்ற இந்த விருது விழாவில் 21 அடிப்படை விருதுகளும், 09 முற்போக்கு செயற்பாடுகளுக்கான விருதுகளும், 06 சுவர்ண சிம்ம விருதுகளும், 07 விசேட ஆற்றல்களுக்கான விருதுகளும், நடுவர் சபையின் விசேட விருது ஒன்றும் வழங்கப்பட்டன.