மாநில அளவில் உணவுத் துறை செயலர் தலைமையில் நேரடி விற்பனையாளர் முகவர்களை கண்காணிக்க ஆணையம்

69 0

மத்திய அரசின் நுகர்வோர் பாதுகாப்பு சட்டமானது மின் வணிகம் மற்றும்நேரடி வணிகத்தில் நியாயமற்ற வணிகநடவடிக்கைளில் இருந்தும் வாடிக்கையாளர்களை காப்பது, வாடிக்கையாளர்களின் உரிமைகளை பாதுகாப்பது போன்றபல்வேறு அம்சங்களுடன் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில் நேரடி வணிகம் தொடர்பான நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தின் கீழ், ஒவ்வொரு மாநில அரசும், நேரடிவிற்பனை முகமைகள், நேரடி விற்பனையாளர்களை கண்காணிக்கும் அமைப்பை உருவாக்க வேண்டும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இதை நிறைவேற்றும் வகையில் உணவுத்துறை செயலர் தலைமையில் கண்காணிப்பு ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. இதில்,உணவுப்பொருள் வழங்கல் ஆணையர் ஒருங்கிணைப்பாளராக இருப்பார். இதுதவிர, நிதி, சட்டம், வணிகவரித் துறை செயலர்கள் உறுப்பினர்களாக இருப்பார்கள். மேலும், உணவு பாதுகாப்பு ஆணையர், தமிழகத்தில் உள்ள மத்திய ஜிஎஸ்டி ஆணையர், மாநில ஜிஎஸ்டி ஆணையர், பொருளாதார குற்றங்களை கையாளும் ஏடிஜிபி நிலையில் உள்ள காவல் அதிகாரி,மாநில அரசால் நியமிக்கப்படும் வல்லுநர்என 10 பேர் உறுப்பினர்களாக இருப்பர்.

இந்த ஆணையம், நேரடி விற்பனையில் நடைபெறும் நிகழ்வுகளை கண்காணிக்கும். நேரடி விற்பனை வணிகம் என்ற பெயரில் நடைபெறும் பணப்பரிமாற்ற திட்டங்களில் ஈடுபடுவோரை தடைசெய்யும். நேரடி விற்பனை என்ற பெயரில் நடைபெறும் நியாயமற்ற வணிகத்தை தடுக்கும்.

நேரடி விற்பனையாளர்கள், நேரடி விற்பனை முகமைகள் தொடர்பான நடவடிக்கைகள் ஆணையத்தால் கண்காணிக்கப்படும். மேலும், நேரடி விற்பனை முகமைகள் தமிழகத்தில் தொழில் செய்யும் போது, அவை பதிவு செய்யப்படுவதை இந்த ஆணையம் உறுதி செய்யும். புகார்களை பெற்று நடவடிக்கை எடுக்கும்.

சட்டத்துக்கு புறம்பான நடவடிக்கைகள் நடைபெற்றால் சம்பந்தப்பட்ட அமைப்புகளுக்கு தகவல் அளித்து நடவடிக்கை எடுக்கும். மத்திய அரசுக்கு தேவையான நேரத்தில் கொள்கை முடிவுகளுக்கான தகவல்களை அளிக்கும். உணவுத் துறை வெளியிட்ட அரசாணையில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது.