வன்செயல்களால் பாதிக்கப்பட்டு கிளிநொச்சியில் குடியேறியவர்கள் கிளிநொச்சி மக்களே

168 0
நாட்டில் ஏற்பட்ட வன்செயல்களால் பாதிக்கப்பட்டு மலையகம் உட்பட தென்னிலங்கையிலிருந்து கிளிநொச்சிக்கு குடிபெயர்ந்து கிளிநொச்சியில் 50 வருடங்களுக்கு மேலாக வாழ்ந்து வருகின்ற மக்கள் கிளிநொச்சி மக்களே அவர்களை அரசியல் மற்றும் இதர நோக்கங்களுக்காக பிரித்து கையாள கூடாது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் சமத்துவக் கட்சியின் பொதுச் செயலாளருமான மு. சந்திரகுமார் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி கடந்த சனிக்கிழமை (டிசம்பர் 30) இடம்பெற்ற மலையகம் 200 நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்

கிளிநொச்சி வாழ்கின்ற இந்திய வம்சாவளி மலையக மக்கள் என்பது அவர்களது அடையாளமாக இருந்தாலும் அவர்கள் இப்போது கிளிநொச்சி மக்களே.

கடந்த காலங்களில் இவர்கள் பல்வேறு பாரபட்சங்களுக்கு உட்படுத்தப்பட்டிருந்தாலும் தற்போது அந்த நிலைமை பெருமளவுக்கு மாற்றப்பட்டுள்ளது. கிளிநெச்சியில் சுமார் 45 மக்கள் வாழ்கின்ற போதும் அவர்களுக்கான அரசியல் பிரதிநிதித்துவம் போதுமான அளவு வழங்கப்படவில்லை ஆனால் எமது கட்சியான சமத்துவக்கட்சி  அந்த நிலைமையினை மாற்றியது நாங்கள் உரிய பிரதிநிதிதுவத்தை வழங்கினோம். மீள்குடியேற்றத்திற்கு பின்னரான காலப்பகுதிகளில் அபிவிருத்தி உள்ளிட்ட விடயங்களில் முக்கியத்துவத்தை வழங்கினோம் எனத் தெரிவித்த அவர் கிளிநொச்சி மாவட்டத்தில் காணப்படுகின்ற மத்திய வகுப்புத்திட்டக்காணிகளில் காணி உரிமையற்று  நீண்ட காலமாக வாழ்ந்து வந்து மக்களுக்கு அந்த காணிகளின் உரிமைகளை சட்டரீதியாக  பெற்றுக்கொடுத்தோம்.

தர்மபுரம் போன்ற கிராமங்களில் குளங்களின்  கீழான நீர்ப்பாசன உரிமைகளை பெற வழி சமைத்தோம், நான் அதிகாரத்தில் உள்ள போது அனைவரையும் சமத்துவத்தோட நடத்த வேண்டும் என்ற நிலைப்பாட்டில் செயற்பாடுகளை முன்னெடுத்தோம் எனத் தெரிவித்த அவர் இன்றும் மலையகத்தில் காணப்படுகின்ற லயன் வாழ்க்கை  ஒரு கவலைக்குரிய விடயம் இந்த வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.