ஐக்கிய மக்கள் சக்தி பரந்த கூட்டணியை உருவாக்கி வருவது யாருக்கும் அமைச்சுப் பதவிகளை வழங்குவதற்கல்லவென்றும், சிறந்த கொள்கைகள் மற்றும் மக்கள் சேவையின் அடிப்படையிலையே இவ்வாறு இணைத்துக் கொள்வதாகவும்,இதனை தவறாக புரிந்து கொண்டு அரசாங்கத்துடன் தொடர்புடைய சில ஊடகங்கள் பணத்தை பெற்றுக்கொண்டு மக்களை தவறாக வழிநடத்தும் வகையில் பொய்யான பிரசாரங்களை மேற்கொண்டு வருவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
ஐக்கிய மக்கள் சக்தி ஆட்சியில் எந்த அமைச்சரும் சுகபோகங்களை அநுபவிக்க முடியாது என்றும்,மிகவும் கடினமான வாழ்க்கையை வாழ்ந்து மக்களுக்கு தன்னலமற்ற சேவை ஆற்ற வேண்டும் என்றும், தேவையில்லாமல் வெளிநாட்டு பயணங்களில் சுற்றுவது போன்ற வழக்கமான பொழுது போக்குகளை அவர்களால் மேற்கொள்ள முடியாது என்றும்,அமைச்சுப் பதவிகளில் விரக்தி மனப்பான்மை எழுந்தாலும் நாட்டைக் கட்டியெழுப்ப வேண்டுமாயின் இவ்வாறான தியாகங்களைச் செய்ய வேண்டும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
மக்கள் பக்கம் நின்று பார்க்கும் போது புத்தாண்டு உதயமாகுவதில் தனக்கு சந்தோச நிலைப்பாடு எழுவதாக இல்லை என்றும்,தானும் தனது குழுவும் நபர்களை அங்கிருந்து இங்கு இழுத்தெடுக்கும் விளையாட்டுகளையோ அல்லது ஆடம்பர ஹோட்டல்களில் இருந்து பணப் பைகளை பரிமாறிக்கொள்வதன் மூலம் நட்பு வட்டார முதலாலித்துவத்தை செயல்படுத்துவதற்கோ அல்லாமால் பொதுமக்களுக்கு சேவை ஆற்றும் நோக்கிலயே இந்த கூட்டணியை உருவாக்கும் பணிகளை முன்னெடுத்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
தென் மாகாண முன்னாள் முதலமைச்சரும் தற்போதைய பாராளுமன்ற உறுப்பினருமான ஷான் விஜேலால் டி சில்வா இன்று (01) ஐக்கிய மக்கள் சக்திக்கு தனது ஆதரவினைத் தெரிவிக்க வந்து கட்சி உறுப்புரிமையைப் பெற்றுக் கொண்ட சந்தர்ப்பத்தில் கருத்துத் தெரிவிக்கும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மேற்கண்டவாறு தெரிவித்தார்.