கிளிநொச்சியில் மழை வெள்ளம் காரணமாக அழிவடைந்துள்ள நெற்செய்கை

86 0

கிளிநொச்சி மாவட்டத்தில் ஏற்பட்ட மழை வெள்ளம் காரணமாக சுமார் 13,897 ஏக்கர் பெரும் போக நெற்செய்கை அழிவடைந்துள்ளது என அறிக்கை இடப்பட்டுள்ளதாக மாவட்ட கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் பிரதி ஆணையாளர் பா.தேவரதன் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி மாவட்டத்தில் நிலவிய சீரற்ற காலநிலை மற்றும் மழை வெள்ளம் காரணமாகவும் இரணைமடுக்குளத்தினது மேலதிக நீர் வெளியேற்றம் காரணமாகவும் இம்முறை மேற்கொள்ளப்பட்டுள்ள பெரும் போக நெற்செய்தியில் பெருமளவான பகுதிகள் அழிவடைந்துள்ளன.குறிப்பாக கண்டாவளைப் பிரதேசத்தில் மூவாயிரம் ஏக்கருக்கு மேற்பட்ட வயல் நிலங்கள் அழிவடைந்து இருப்பதாக விவசாயிகளால் தெரிவிக்கப்பட்டுள்ளது.மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள நெற்செய்கை அழிவு விவரங்கள் தொடர்பாக தகவல் வெளியிட்ட பிரதி ஆணையாளர், கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள கமநல சேவை நிலையங்கள் ஊடாக குறித்த தகவல்கள் திரட்டப்பட்டதாகவும் அந்த தகவல்களுக்கு அமைய 13897 ஏக்கர் அழிவடைந்துள்ளதுடன் 4461 விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

அதாவது கிளிநொச்சி இராமநாதபுரம், அக்கராயன்குளம், முழங்காவில், கண்டாவளை, பரந்தன், பூநகரி, புளியம்பக்கணை, உருத்திரபுரம், பளை ஆகிய பத்து கமநல சேவை நிலையங்களின் கீழ் குறித்த அழிவுகள் ஏற்பட்டுள்ளதாகவும், குறித்த அழிவுகள் தொடர்பாக பரிசீலனை செய்யப்படவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.